சென்ற வாரம் வியாழன் (டிசம்பர் 12)அன்று சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் டிங் லீ ரன் என்ற சீனரைத் தோற்கடித்து 18 வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி உலகத்தையே அதிரவைத்தார் பாரத செஸ் வீரர் குகேஷ். டிங் லீ ரன் 55வது நகர்த்தலில் தவறிழைத்தார். குகேஷ் அந்த தவறை பயன்படுத்தி பட்டத்தை கைப்பற்றினார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் குகேஷின் வழிகாட்டி.
குகேஷ் 13 வயது ஆவதற்குள்ளேயே கிராண்ட்மாஸ்டர் ஆனவர். ஏழு வயதில் விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் பார்வையாளராக இருந்தபோதுகூட அவர் கனவு உலக சாம்பியன் ஆவதுதான். அது இவ்வளவு சீக்கிரம் நனவாகி விட்டது.
காரணம், குகேஷுக்கு அவரது பெற்றோர் அபாரமாக ஆதரவளித்தார்கள். தாய், தந்தை இருவரும் டாக்டர்கள். செஸ்ஸில் மகன் குகேஷ் முன்னேற வேண்டும் என்பதற்காக டாக்டர் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு அப்பா குகேஷுக்கு ஊக்கமளித்து வந்தார். அம்மா வருமானத்தில் மட்டும் குடும்பம் நடை
பெற்றது. மகனுக்காக அப்பாவின் தியாகம் இணையற்றது என அம்மாவே ஒரு பேட்டியில் தெரிவித்தார். உலக செஸ் சாம்பியனுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை 21 கோடி ரூபாய். தமிழக அரசும் 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்தது.
உலக சாம்பியனை பிரதமர் மோடி பாராட்டுகையில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை குகேஷ் சாதித்துள்ளார்” என தெரிவித்தார். “குகேஷின் கடின உழைப்பும் தளராத உறுதியும் பெற்ற வெற்றி இது” என்றும் கூறினார்.
ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் இவ்வாறு பாராட்டுத் தெரிவித்துள்ளார்: “வியாழன் அன்று அந்த பையன் சாம்பியன் பட்டத்தை வென்றதை நான் கண்டேன். அவரை நான் அப்படி அழைக்கவே விரும்புகிறேன். ஏனெனில், நான் முதல் முறை உலக சாம்பியன் பட்டம் வென்றபோது அவர் பிறக்கவே இல்லை. 18 வயதான அவர், தற்போது வென்றுள்ளார். அவரது அமைதியும் தன்னம்பிக்கையும் இந்த விளையாட்டின் வருங்காலமாக இருக்கும்.”
குகேஷ் போல பிள்ளைகள் திறமைசாலிகளாக வளர்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல பெயர் சேர்க்கிறார்கள் என்றால், காரணம் குடும்பம். பாரதிய குடும்பம் எதுவும் பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும். பெற்றோரின் வளர்ப்பு காரணமாக பண்பானவர்களாகவும் நடந்துகொண்டு பிள்ளைகள் உலகத்தின் வாழ்த்தைப் பெறுவார்கள்.
சிங்கப்பூர் செஸ் போட்டியில் குகேஷ் பெற்ற வெற்றி அவரை உலக சாம்பியன் ஆகிய அந்த தருணத்தில் அந்த 18 வயது இளைஞர் உள்ளம் எப்படி அடியோடு உணர்ச்சிப்பிழம்பானது என்பதை கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை; கண்முன்னாலேயே தெரிந்தது. அந்த நிலையிலும் வெற்றி வாகை சூடிய குகேஷ், கருப்பு, வெள்ளை இரண்டு நிற காய்களையும் செஸ் போர்டின் மேல் முறையாக அடுக்கி வைத்துவிட்டு, போர்டை இரு கரங்களாலும் தொட்டு கைகுவித்து வணங்கி, பிறகுதான் வெற்றியை கொண்டாட எழுந்தார். இன்னொரு இளம் சென்னை செஸ் வீரர் பிரக்ஞானந்தா போலவே இவரும் நெற்றியில் திருநீறு அணிந்து தனக்கு தெய்வ பக்தி உண்டு என்பதை தெரிவித்துக்கொள்ள தயங்குவதில்லை, தவறுவதில்லை.
செஸ் என்றல் கவனம் சிதறாமல் மணிக்கணக்கில் மனம் ஆட்டத்தில் முனைவது அவசியம். குகேஷ் பயின்று வரும் தியானம் அவருக்கு அபாரமாக கை கொடுத்தது. சென்னை வேலம்மாள் வித்யாலயத்தில் படித்த குகேஷ் பள்ளியில் நடந்த ஒரு செஸ் முகாமில் கலந்து கொண்டார். அதில் தான் இவரது செஸ் ஆர்வம் பயிற்சியாளர் ஒருவரின் கண்ணில் பட்டு, வாழ்க்கையையே புதுப்பாதையில் நடைபோடச் செய்துவிட்டது.
குகேஷ் ஒரு அசாதாரண திறமைசாலி, ஆனால் இது ஆச்சரியப்படுத்தும் ஒரு தனி நபர் புராணம் அல்ல. பாரதத்தில் உலகிலேயே தலைசிறந்த செஸ் சூழல் நிலவுவதாக உலக ஊடகங்கள் பேசுகின்றன. பாருங்களேன், பாரதத்தில் 85க்கும் மேற்பட்ட கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர், அவர்களில் பலர் இன்னும் வாகனம் ஓட்டும் வயதை எட்டவில்லை.
பாரதத்தின் மண்வாசனை அப்படி. 2022 ல் சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசிய போது, சிவபெருமானே சதுரங்கமாடிய வரலாற்றை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த திருப்பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் தல புராணத்திலிருந்து அறிய முடிகிறது என்றும், பண்டைக்காலம் தொட்டே இந்த விளையாட்டு தமிழகத்தில் விளையாடப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
ஆம், 50 ஆண்டுகளுக்கு முன் சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்த ‘மிஷா’ என்ற சிறார் பத்திரிகையில், செஸ் பற்றிய தொடர் கட்டுரை, “பாரதம் உலகுக்கு வழங்கிய கொடை செஸ் விளையாட்டு” என்று அறிவித்து ஆரம்பித்தது.
கட்டுரையாளர் :
மூத்த பத்திரிகையாளர்