கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணி – இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்

கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் கூடிய புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் இந்தஆண்டு இறுதிக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம் என்று பெயரிடப்பட்டு கடந்த ஜனவரி மாத இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்த பேருந்து நிலையத்துடன் புறநகர் மின்சார ரயில் சேவையை இணைக்கும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ரூ.20 கோடிமதிப்பீட்டில் வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையம் அமைக்க, பணிகள்தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரூ.20 கோடி மதிப்பில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், மூன்று நடைமேடைகளுடன் அமையஉள்ளது. நடைமேடை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 10 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளம் மறுசீரமைப்பு உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மின்தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம், ரயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.