டாக்டர் ஸ்ரீபதி சாஸ்திரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ‘சன்சோதன் த்னியன் விசார் பிரதிஷ்தான்’ அமைப்பை சேர்ந்த பிஷப் டோசிஸ் தாமஸ் டாப்ரே, கிறிஸ்தவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இடையே அர்த்தமுள்ள உரையாடலின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். “ஹிந்துக்களின் மிகப்பெரிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகளைக் குறைக்க இதுபோன்ற உரையாடல்கள் உதவும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை கிறிஸ்தவ சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ் , கிறிஸ்தவர்களுக்கும் சங்கத்திற்கும் இடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசியவாதம் என்ற கருத்தை நாங்கள் ஏற்கிறோம்” என்று பேசினார். நிறுவனத்தின் ஆராய்ச்சி இதழை வெளியிட்டு பேசிய, கோகலே இன்ஸ்டிடியூட் ஆப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் துணைவேந்தர் டாக்டர் அஜித் ரானடே, சமுதாய நலனுக்கான ஆராய்ச்சியின் அவசியத்தை கோடிட்டுக் காட்டினார். டெக்கான் எஜுகேஷன் சொசைட்டியின் தலைவர் டாக்டர் ஷரத் குண்டே, ‘உலக சிந்தனை மற்றும் கலாச்சாரத்திற்கு பாரதம் ஏராளமான பங்களிப்பை அளித்துள்ளது’ என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். ஜி.எம்.கே குளோபல் நிறுவனத்தின் கபீஷ்வர் ஜோஷி மற்றும் யோகேஷ் ஜோஷி ஆகியோர் ஒரு கோடி ரூபாயை சன்சோதன் தினியன் விசார் பிரதிஷ்டானுக்கு நன்கொடை அளித்தனர்.