உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் சோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு இம்மசூதி கட்டப்பட்டதாக புகார் உள்ளது.
இந்த மசூதி வளாகத்தின் தென் பகுதியில் ஒரு பாதாள அறை உள்ளது. வியாஸ் மண்டபம் என்று அழைக்கப்படும் இந்த பாதாள அறைக்கு செல்வதற்கான வழி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் உள்ளது. வியாஸ் மண்டபத்தில் உள்ள சிலைகளுக்கு கடந்த 1993-ல் தினசரி பூஜை நிறுத்தப்பட்டது. இந்த பூஜையை மீண்டும் தொடங்கவும் அங்கு இந்துக்கள் வழிபடவும் வாராணசி மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜனவரியில் அனுமதி அளித்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இதையடுத்து மசூதி கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வியாஸ் மண்படத்தில் இந்துக்கள் வழிபாட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தற்போதுள்ள நிலையே தொடர நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கின் தீர்ப்பை ஜூலைக்கு தள்ளிவைத்தனர்.