நாட்டின் சுதந்திரத்துக்கு முன், காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க விடாமல் பலர் சதிச் செயல்களில் ஈடுபட்டபோது, காஷ்மீர் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் பண்டிட் பிரேம்நாத் டோக்ரா, காஷ்மீர் மன்னரை பல முறை சந்தித்து, பாரதத்துடன் இணைவது குறித்து மனுக்கள் அளித்து விவாதித்துள்ளார். 1947 ஆகஸ்டு 14 அன்று, ஸ்ரீநகர் தபால் நிலைய அதிகாரிகள் தபால் நிலைய கட்டடத்தின் மீது பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்கள்.தபால் நிலையங்கள் எல்லாம் பாகிஸ்தான் எல்லையான சியால்கோட் பகுதியில் இருந்தன.ஆனால் ஸ்வயம்சேவகர்கள் விரைந்து சென்று, தபால் நிலைய அதிகாரிகளை வலியுறுத்தி கொடியை இறக்கினார்கள்.ஆகஸ்டு 15 அன்று எல்லா வீடுகளிலும் மூவர்ணக் கொடியைப் பறக்க விட, நூற்றுக்கணக்கான கொடிகளை விநியோகித்தார்கள்.
எனினும் தனது நிலைப்பாட்டை காஷ்மீர் மகாராஜா தெளிவுப்படுத்தாத நிலையில், உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் ஸ்ரீ குருஜி 1947 அக்டோபர் 17-ல் ஸ்ரீநகரில் மகாராஜா ஹரி சிங்கை சந்தித்து, பாரதத்துடன் இணைய சம்மதிக்க வைத்துவிட்டு, அக்டோபர் 19 அன்று டெல்லி சென்று, படேலிடம் தகவலைத் தெரிவித்தார். நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நேரத்தில் பாகிஸ்தான் படைகள் ஊடுருவின. ஆனால், ஜம்மு நகரில் சுமார் 20,000 முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கலவரம் செய்யத் தொடங்க, சங்கத்தின் இளைஞர்கள், ஊருக்குள் இருந்து கொண்டு பாகிஸ்தான் ஆதரவு முஸ்லீம்களின் தாக்குதலை சமாளித்து, ஜம்முவைக் காப்பாற்றினார்கள்.
அதன்பின் காஷ்மீர் சேர்ந்ததும், சிறப்புப் பிரிவு 370 கொண்டு வரப்பட்டதும் நமக்குத் தெரியும்.ஆனால், அந்த 370வது பிரிவை தொடக்கத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் எதிர்த்து பல தீர்மானங்கள் நிறைவேற்றி, தொடர்புடைய அனைத்து இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்று வந்தது. இது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த உதவியது. 370வது பிரிவு நுழைக்கப் பட்டதிலிருந்து, ஆர்.எஸ்.எஸ் காஷ்மீர் பிரச்சினையில் 27 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.ஒவ்வொரு தீர்மானத்திலும், இந்தப் பிரிவு நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதாக தெளிவாகக் குறிப்பிட்டது.‘பிரஜா பரிஷத்’ என்பது, பிரிவு 370க்கு எதிராக 1947ல் தொடங்கிய முதல் இயக்கம். இது ஏற்பட முக்கிய காரணமானவர்கள் ஆர்.எஸ்.எஸ் காஷ்மீர் தலைவர் பண்டிட் பிரேம்சந்த் டோக்ரா, பேராசிரியர் பால்ராஜ் மாதோக், ஸ்ரீ மாதவ ராவ் முளே (காஷ்மீர் மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளர்) ஜகதீஷ் அப்ரோல் (பிரசாரக்- ஜம்மு), துர்கா தாஸ் வர்மா, கேதர்நாத் சஹானி, ஷ்யாம்லால் சர்மா, டாக்டர் பிரபக்வான் ஆகியோர். அவர்கள் இரண்டு நாட்கள் நடத்திய சிந்தன் பைடக் மூலம் பிரஜா பரிஷத் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.இதன் முதன்மை நோக்கம், ஜம்முவில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு ஆதரவாகவும், பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பாகவும் இருந்தது. பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி, 370 ஐ ரத்து செய்ய, ‘ஒரு நாட்டில் இரண்டு அரசியல் சாஸனம், இரண்டு கொடி, இரண்டு தலைமை இருக்க முடியாது’ (ஏக் தேஷ் மே தோ விதான், தோ நிஷான், தோ பிரதான் – நஹீ சலேகா, நஹீ சலேகா) என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினார்.
1947 நவம்பர் 9 முதல் 1952 நவம்பர் வரை ஜம்மு காஷ்மீர் முழுவதும், சத்தியாகிரகம், பேரணி, ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தி, (உமர் அப்துல்லாவின் தாத்தா) ஷேக் அப்துல்லாவின் தேசவிரோத நடவடிக்கைகளை மக்கள் முன் எடுத்து வைத்தார்கள். இந்த சத்தியாகிரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.1952 நவம்பர் 21-ல் பண்டிட் பிரேம்சந்த் டோக்ரா தலைமையில் ஜம்முவின் எல்லா பகுதிகளிலும் இந்த கோஷத்தை முன்வைத்து போராட்டங்கள் நடந்தன.
சங்கத்தின் உதவியுடன் தொடங்கப்பட்ட பாரதிய ஜனசங்கத்தின் தலைவரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, 1952ல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் “பாரதத்தின் மற்ற பகுதிகளுக்கான அதே அரசியல் சாஸனத்தின் மூலம் அவர்கள் (காஷ்மீரிகள்) ஆளப்பட வேண்டும் என்ற உரிமையைமுன்வைத்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் வேறுவிதமாக நினைத்தால், ஜம்முவும் பாதிக்கப்பட வேண்டுமா என்ற கவலையுடன் கடிதம் எழுதப்பட்டது.அதே ஆண்டு, ஜனசங்கத்தின் முதலாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கான்பூரில் நடந்தது.கூட்டத்தில் அந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.அதன் முதன்மை இலக்கு பிரிவு 370 ஐ ஒழிப்பது.இரண்டாவது, காஷ்மீரை பாரதத்துடன் ஒருங்கிணைத்தல்.காஷ்மீரில் இருந்து ஹிந்து ஜம்மு பிரிக்கப்படுதல், அந்தப் பகுதியை மூன்றாகப் பிரித்தல் ஆகிய கோரிக்கைகளுக்கு களம் அமைத்தல் ஆகியவை அதன் பிற நோக்கங்கள்.
இந்தப் போராட்டம் பிரஜா பரிஷத்தின் தலைமையில் நடைபெற்றது.இதற்கு ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ் இரண்டும் ஆதரவளித்தன.இந்தப் பரபரப்பு விரைவில் பஞ்சாபிலும் டெல்லியிலும் பரவியது.இந்நிலையில், பிரிவு 370-ன் படி ‘காஷ்மீர் மாநிலத்திற்கு வருபவர்கள், மாநில அரசின் அனுமதி பெற்றே வரவேண்டும்’ என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டப் பிரிவை எதிர்த்து முகர்ஜி போராட்டத்தை முன்னிலைப்படுத்தினார்.1953 ஜூன் 11ல், மாநில அரசின் அனுமதி பெறாமல் முகர்ஜி காஷ்மீரில் நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.370 வது பிரிவை நீக்க, சங்க அமைப்புகள் பொதுமக்களைத் திரட்டிய முதல் நிகழ்வு அது.
“பாரதிய ஜனசங்கம் அதன் நாக்பூர் அமர்வில் தற்காலிக தன்மையுடைய 370 வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. இந்தச் சட்டப்பிரிவு தொடரும் வரை, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாது” என ஜனசங்கத்தின் அப்போதைய அமைப்புச் செயலாளரான தீன்தயாள் உபாத்யாய (1960ல்) எழுதினார். 1967ல், ஆங்கில வார இதழ் ஆர்கனைசருக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீ குருஜி “காஷ்மீரைத் தக்கவைக்க ஒரே வழி முழுமையான ஒருங்கிணைப்பு; 370ஐ நீக்குதல்” என்று கூறினார்.
காஷ்மீர் தேசிய கவனத்தை ஈர்த்ததால், ஜம்முவும் லத்தாக்கும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. இடைவெளியைக் குறைக்க, ஆர்.எஸ்.எஸ் காஷ்மீர், ஜம்மு, லத்தாக் ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளில் முன்னேற்பாடு தொடங்கியது. எல்லா வகையிலும் காஷ்மீர் பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று சுதந்திரம் அடைந்தவுடனே மிகத் தெளிவாக கூறியது ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் நடத்தும் சிந்தனைக் குழுவான ‘ஜம்மு – காஷ்மீர் ஆய்வு மையம்’ (JKSC) ஜம்மு – காஷ்மீரின் 22 மாவட்டங்களிலும் பல கிளைகளைக் கொண்டுள்ளது.2011-க்குப் பிறகு இந்த சிந்தனைக் குழு ஆய்வு அறிக்கைகளைத் தயாரிக்கத் தொடங்கியவுடன் உலகம் அறியாத பல உண்மைகள் வெளிப்பட்டன.அதில் ஒன்றுதான் 35ஏ என்ற பிரிவு.ஜம்மு, லத்தாக் இடத்தை காஷ்மீர் ஆக்கிரமித்துள்ளது.ஒரு உண்மை என்னவென்றால், ஜம்மு – காஷ்மீரின் 82 சதவீத நிலம் லத்தாக், கில்கிட்- பால்டிஸ்தான் ஆகும்.சுதந்திரத்திற்குப் பிறகும், காஷ்மீரை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் மத்திய அரசு ஏன் விடாப்பிடியாக இருந்தது?லத்தாக்கின் ராணுவ முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது.உண்மையில், லத்தாக் இல்லாவிட்டால், சீனாவின் ராணுவம் இமயமலையின் தெற்கு அடிவாரத்தில் வந்து உட்கார்ந்திருக்கும்.ஜம்மு –காஷ்மீர் ஆதிக்கத்திற்கு எதிராக கிளம்பிய லத்தாக்கின் எதிர்ப்பை நிராகரித்தார் பிரதமர் நேரு.மாறாக, அந்த பிராந்தியத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஷேக் அப்துல்லாவின் கைகளில் அதன் விதியை அவர் விட்டுவிட்டார்.
2014–2019 க்கு இடையில், ஆர்.எஸ்.எஸ் 5,000க்கும் மேற்பட்ட சிறிய, மற்றும் நடுத்தர கூட்டங்கள் மூலம் 370 வது பிரிவு பற்றியும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அதன் அழிவுகரமான விளைவுகள் பற்றியும் எடுத்துக் கூறியது. இந்த கூட்டங்கள் அமைதியான பொதுஜனக் கருத்தை உருவாக்கியது.இதற்கு இணையாக, நாடாளுமன்றத்தில், குறிப்பாக ராஜ்யசபாவில் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஒரு நுணுக்கமான திட்டமிடப்பட்டபயிற்சி, 2016ல் தொடங்கியது.
370ஐ நீக்குதல், காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தல், காஷ்மீரில் பாகிஸ்தான்- சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்டெடுப்பது – இவை ஹிந்து அமைப்புகளோ அல்லது அதன் தலைவர்களோ முன்வைத்த கோரிக்கைகள் அல்ல. இந்தக் கோரிக்கைகள், 2011 டிசம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை அன்று புதுடெல்லியில் உள்ள ஜந்தர்-மந்தரில் பாரத முஸ்லிம்களால் பகிரங்கமாக எழுப்பப்பட்டன. இந்த முயற்சி முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் மூலமாக நடத்தப்பட்டது.23 மாநிலங்கள் மற்றும் 175 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிட்டத்தட்ட 10,000 முஸ்லிம்கள் குளிரையும் அடர்ந்த மூடுபனியையும் மீறி இந்தக் கோரிக்கைகளை எழுப்பினர்.
காஷ்மீர் பாரதத்துடன் இணைய முட்டுக்கட்டை போட்டவர் நேரு. காஷ்மீர் ஒருங்கிணைப்பில் நேருவின் உண்மை முகத்தை பொது வெளியில் காட்ட வேண்டிய நேரம் இது. நேருவின் ஈகோவால் காஷ்மீர் பாரதத்துடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டது. மகாராஜா ஹரி சிங் பாரதத்துடன் இணைய விரும்பினார். ஆனால் நேரு இதற்கு தடையாக இருந்தார். 1952 ஜூலை 24 அன்று மக்களவையில், நேரு காஷ்மீர் ஒரு அலாதி விஷயம், அங்கு விஷயங்களை அவசரப்படுத்த முயற்சிப்பது சரியானது அல்ல என்றார்.
1947 அக்டோபர் 21 அன்று, நேரு காஷ்மீர் பிரதமர் எம்.சி.மகாஜனுக்கு எழுதிய கடிதத்தில், இந்த நேரத்தில் காஷ்மீர் பாரதத்துடன் சேர்வது சரியாக இருக்காது என குறிப்பிட்டிருந்தார். 1947அக்டோபர் 20ல் பாகிஸ்தான்காஷ்மீர் மீது படையெடுத்தது. படையெடுப்புக்கு மறுநாள், அக்டோபர் 21 அன்று, காஷ்மீர் அரசாங்கத்திற்கு தனது தனிப்பட்ட விருப்பத்தால் பாரதத்துடன் இணைய வேண்டாம் என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார் நேரு. (ஷேக் அப்துல்லாவை காஷ்மீரின் பிரதமராக நியமிப்பதே நேருவின் எண்ணமாக இருந்தது).
1946ல் ஷேக் அப்துல்லாவால் ‘காஷ்மீரை விட்டு வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் நேருவும் அவருக்கு ஆதரவளித்தார். மகாராஜா ஹரி சிங் பாரதத்துடன் சேர ஆர்வமாக இருந்தார். ‘‘காஷ்மீரை விட்டு வெளியேறு’’ என்ற கோரிக்கையை கைவிடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.ஹிந்து மன்னருக்கு எதிராக ‘காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்ற முழக்கத்தை எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கண்டித்தனர்.ஆனால் நேரு எதைப் பற்றியும் கவலைப்படாமல், அப்துல்லாவுக்கு ஆதரவாக இருந்தார்.
மன்னர் ஹரி சிங், 1947ல் பாரதத்துடன் இணைய வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்த போது நேரு அலட்சியமாக இருந்தார்.மகாராஜா ஹரி சிங் கேட்ட போதே காஷ்மீரைபாரதத்துடன் இணைத்து இருந்தால் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற பகுதியே உருவாகி இருக்காது. அதை விட்டுவிட்டு நேரு, காஷ்மீர் மீது பாகிஸ்தான் தொடுத்த போரை ஐநா சபைக்கு கொண்டு சென்றதால் அப்போது யார் யார் எங்கிருக்கிறார்களோ அந்த நிலம் அவர்களுக்கு சொந்தம் என்று கூறியது ஐ.நா சபை. அதனால் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதி தற்போது வரை பாரதத்துக்கு பெரும் சிக்கலான பகுதியாக இருந்து வருகிறது.
நன்றி : ஈரோடு சரவணன், செங்கோட்டை ஸ்ரீராம்