காலிஸ்தானை கண்டுகொள்ளாத அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள ஹட்சன் இன்ஸ்டிடியூட் என்ற கல்வி நிறுவனத்தின் சிந்தனை குழு அமைப்பினர், பாரதிய துணைக் கண்ட நிபுணர்களின் உதவியுடன் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ பாகிஸ்தான் ஆதரவுடன் அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை அமெரிக்க அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். காலிஸ்தான் பயங்கரவாதம், தெற்காசியாவிற்கும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கும் சேதம் விளைவிக்கலாம். தற்போதைய பாரத கனடா நாட்டு தூதரக உறவுகள் இதற்கு சிறந்த உதாரணம். அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான சீக்கியர்கள் சட்டத்தை மதித்து நடக்கின்றனர். ஆனால், பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்படும் காலிஸ்தானி பிரிவினைவாதிகள் அப்படியல்ல.

காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களில் அமெரிக்க அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. அமெரிக்க மண்ணில் அவர்களின் பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆட்சேர்ப்பு மற்றும் நிதி சேகரிப்பை அனுமதிக்கக் கூடாது. அமைதி போராட்டங்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் நடப்பது பஞ்சாப்பை இலக்காகக் கொண்ட ஒரு வன்முறை அலையின் ஆரம்பம்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் இவர்களுக்கு எதிராக இந்த நாடுகள் ஏன் செயல்படவில்லை, ஏன் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுக்கின்றன? என்பது புரியவில்லை. பாரதம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்நாடுகள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. உளவுத்துறை  தகவல்களையும் பகிர்வதில்லை. முன்னெச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால், வருங்காலத்தில் இவர்கள் ஏராளமான அப்பாவிகளைக் கொல்வார்கள். இதனை உணர்ந்து அமெரிக்கா செயல்படாவிட்டால், பாரதத்தின் நட்பு நாடு, குவாட் கூட்டணியில் பங்காளிகள் என்று பேசுவது பொய்யானதாகிவிடும்’ என தெரிவித்துள்ளது.