மகாத்மா காந்தி 1934ல் தமிழ்நாட்டில் விரிவாக சுற்றுப்பயணம் செய்தார். ஹரிஜன் யாத்ரா என்று அந்த சுற்றுப்பயணத்துக்கு பெயர். அதற்கு சற்று முன்தான் காந்திஜிக்கும் அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா உடன்படிக்கை’ ஏற்பட்டிருந்தது.
அதாவது, பிரிட்டிஷ்காரன் ஹிந்து சமு தாயத்தை தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் மற்ற ஜாதியினர் என்றும் பிரித்து மோத விடுவதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி என்று அறிவித்தான். அம்பேத்கரும் அதை ஆதரித்தார். சமுதாயம் பிளவுப்படக்கூடாது என்று அதை எதிர்த்து காந்திஜி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். பல தலைவர்களும் அம்பேத்கரிடம் பேசியதில் அம்பேத்கர் பிரிட்டிஷ் காரனின் அறிவிப்புக்கு தனது ஆதரவை வாபஸ் பெற்றார். இதையடுத்து பூனா உடன்படிக்கை.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நலப்பணிகள் செய்ய நிதி திரட்டுவதற்காக காந்திஜி இந்த யாத்திரையை மேற்கொண்டார். ஒவ்வொரு ஊரிலும் கோயிலுக்குள் எல்லா சமூகத்தாரும் அனுமதிக்கப்படுகிறார்களா என்று காந்திஜி விசாரித்து தெரிந்துகொண்டார். இல்லையென்றால் ஆலயப்பிரவேசம் அவசியம் என்று எடுத்துக்கூறினார். விழுப்புரத்தில் சுவாமி சகஜானந்தர் போன்ற பட்டியல் சமூக பெரியவர்கள் நந்தனார் பள்ளிக்கூடம் நடத்தி வந்தார்கள். அதுபற்றியெல்லாம் விவரமாக தெரிந்துகொண்ட காந்திஜி அகில பாரத அளவில் சேரும் நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவை அந்த பள்ளிக்கு தந்து உதவ முன்வந்தார்.
தென்காசியை அடுத்த குற்றாலத்தில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. அதில் குளிக்குமாறு காந்திஜியை அழைத்தார்கள். எல்லா சமூகத்தாரும் அருவியில் குளிக்க அனுமதி உண்டா என்று வினவினார் காந்திஜி. இல்லை என்று பதில் வந்தது. சட்டென்று திரும்பிச்செல்ல புறப்பட்டார் காந்திஜி. காரணம் கேட்டார்கள். எனது ஹரிஜன சகோதரர்களும் குளிக்கிற நாள் வரட்டும். அதுவரை நான் அருவியில் குளிக்கமாட்டேன் என்று விளக்கினார்.
ஹரிஜன சகோதரர்களுக்கு நல்லது செய்வதற்காக எல்லா ஊர்களிலும் தாய்மார்களும் பெரியோர்களும் நன்கொடை வாரி வழங்கினார்கள். அந்த நாட்களில் காந்திஜியின் அந்த யாத்திரையில் 1,24,000 ரூபாய் சேர்ந்ததாக வரலாறு. இதையெல்லாம் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத சுயமரியாதைக்காரர்கள் என்ற கூட்டத்தார் சில ஊர்களில் காந்திஜிக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்தார்கள். தேசிய உணர்வாளர்கள் ஹரிஜன சேவையில் ஈடுபடுவதை எதிர்த்த அந்த சுயமரியாதைக்காரர்கள் தாங்கள் யார் என்று காட்டிக் கொண்டுவிட்டார்கள். தேசியத்துக்கு விரோதம்; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரோதம்; காந்திஜி தலைமையிலான சுதந்திரப் போராட்டத்திற்கு விரோதம்!
சாதாரண மக்களின் மனநிலை அன்று எப்படியிருந்தது என்பதற்கு காந்திஜியின் யாத்திரையின்போது ஒரு சம்பவம். ஒரு ஊரில் சில ஐரோப்பியர்கள் காந்திஜிக்கு வெள்ளியால் ஆன பரிசுப்பொருள் ஒன்று கொடுத்தார்கள். பரிசாக கிடைத்த அனைத்தையும் ஏலம் போட்டு கிடைத்த தொகையை ஹரிஜன நலநிதியில் சேர்த்து வந்தார் காந்திஜி. அதுபோல இந்த வெள்ளிப்பொருளை ஏலம் போட்டபோது ஊர்மக்கள் யாரும் அதை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அந்த அளவுக்கு அன்று மக்களின் விழிப்புணர்வு இருந்தது.