காஞ்சிபுரத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய தடைவிதித்த திமுக அரசுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து மீண்டும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உத்தரவால் நிதி அமைச்சர் நிர்மலா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.உரிமை பறிப்பு
காஞ்சிபுரத்தில் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கோயில்களை தி.மு.க தவறாக பயன்படுத்துகிறது. கோயில்களில் வழிபாடு செய்ய ஒவ்வொரு ஹிந்துவுக்கு உரிமை உண்டு. பிரதமர் பங்கேற்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள்.
ஹிந்துக்கள் உரிமையும், எனது உரிமையும் பறிக்கப்படுகிறது. திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. பிரதமர் மீதான தனிப்பட்ட வெறுப்பை காரணம் தி.மு.க., அரசு பக்தர்களை வஞ்சிக்கிறது.ஹிந்துக்களின் வழிபாட்டு முறையில் தி.மு.க., தலையிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும், ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை காண எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காண, பக்தர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது போலீசார் எச்சரிக்கையால், எல்.இ.டி.,திரை அகற்றப்பட்டது.
கோர்ட் உத்தர
ராமர் கோயில் திறப்பை நேரடி ஒளிபரப்பு செய்ய போலீசாரின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றமும், நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. இதனையடுத்து கோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து, அகற்றப்பட்ட எல்இடி திரை மீண்டும் அமைக்கப்பட்டு, நேரலைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா, நீலகிரி குன்னூர் மேல் உபதலை ராமர் கோவில் மற்றும் பந்தலூர் அருகே சிவன் கோவிலில் எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் ராம நாமம் பாடி பக்தியுடன் பங்கேற்றனர். முன்னதாக அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான எல்.இ.டி திரை அகற்றப்பட்டுள்ளது. திமுக அரசு மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது. செங்கல்பட்டு அருகே 200 வீடுகள் கொண்ட கருநிலம் என்ற சிறிய கிராமத்தில் அயோத்தி நிகழ்ச்சியைக் காணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோயில் பகுதியிலும் எல்.இ.டி. கட்ட அனுமதி தரப்படவில்லை.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலிலும் போலீசார் எச்சரிக்கையால் எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டுள்ளது. திமுக அரசு மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. இந்த விரோத தி.மு.க. அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 400- க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தி.மு.க. அரசு எல்.இ.டி. திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.