காசி தமிழ் சங்கமம் எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. ஒவ்வொரு வரவேற்பு நிகழ்ச்சியும் என்னை வியக்க வைத்தது. சரியான நேரத்திற்கு உணவு, பலகாரம், தேநீர், இரயில்சுத்தம், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன ரயில் பெட்டி பயணம் என அத்தனை கவனிப்பும் என்னை அன்பில் அழ வைத்தது.
காசி தமிழ் சங்கமம் தன்னார்வலர்களின் உழைப்பு, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் எங்களுக்காக ஏதோ ஒன்று வாங்கிக் கொடுத்து உடலளவிலும், மனதளவிலும் எங்களை வலிமையாக வைத்த அந்த தன்னார்வலர்கள் மிகவும் போற்றக்கூடியவர்களே. எங்களுடன் பயணித்த மாணவர்கள் குழு அனைவரிடத்திலும் தேச ஒருமைப்பாட்டை கண்டேன்.
ஏதோ பல வருட நண்பர்கள் போல நெருங்கி பழகிய தருணம். இரண்டு நாட்கள் எங்களது இரயில் பயணம் இருந்தது. இரவு மூன்று மணி அளவில் வாரணாசி சென்றோம். அங்கே அந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்த அந்த உற்சாக வரவேற்பு வார்த்தையில்வர்ணிக்க முடியாத ஒரு தருணம்.
இரவு தங்கிய நட்சத்திர ஹோட்டல், அங்கே கொடுத்த அனைத்து வசதிகளும் ஆச்சரியம். உடல்நிலை சரியில்லாதவர்களை தன் வீட்டுப் பிள்ளை போல் பார்த்துக் கொண்டது பேரானந்தத்தை அளித்தது.

அடுத்த நாள் காலை காசி விஸ்வநாதர் ஆலய தரிசனம், அங்கே கங்கை தீர்த்தத்தில் நாங்களே விஸ்வநாதருக்கு அருகில் சென்று அபிஷேகம் செய்தது, அந்த நொடியில் நம் குடும்பத்தில் உள்ள அனைத்து பாவங்களும் விலகியதாக உணர்ந்த ஒரு அற்புத சூழ்நிலை.
காசிக்கும் -தமிழகத்திற்கும் உள்ள ஒற்றுமையையும், உறவையும் ஒருவர் அருமையாக எங்களுடன் கலந்துரையாடி, அனைத்து விஷயங்களைப் பகிரும் போது, இவ்வளவு காலம் இந்த விஷயம் அறியாமல் இருந்து உள்ளோமே என்ற ஒரு குழந்தைத் தனத்தை அறிந்தேன்.
கங்கையின் பரிசுத்தமான நீரையும் தமிழ் வாழ் மக்களையும் சந்தித்தது, நம் தேச ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது. அன்று மாலை நமோ காட்டில் தொடக்க நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல் முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை “ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்”, “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற முழக்கம், அனைவரும் மனதிலும் ஆழமாகப் பதிந்தது.
அன்று நமது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 90 சதவிகிதம் தமிழில் பேசியது ஆச்சரியப்பட வைத்தது. தமிழகத்தின் பெருமையை அவ்வளவு அழகாக தன் உள்ளார்ந்த மனதோடு வெளிப்படுத்தியதை நினைத்து நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
இன்னொரு விஷயம் என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது, அது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கூறிய வார்த்தை, அனைவரும் தென் பாரதத்திலிருந்து வந்துள்ளனர், ஆதலால் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள உணவு வகைகளை வழங்க வேண்டும்; ஏனென்றால் அவர்களுக்கு நம்முடைய உணவு முறைகள் ஏற்றுக்கொள்ள இயலாது; ஆதலால் அவர்கள் உணவை மூன்று நேரமும் கொடுக்க வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார். அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
அன்று இரவு பெரிய படகு பயணத்தில், கங்கைக் கரையில் உள்ள அனைத்து படித்துறைகளையும், அந்த இரவு நேரத்தில் அழகிய மின் விளக்குகளால் கங்கா ஆரத்தி பார்க்கையில் காணக் கிடைக்காத காட்சி என்று தோன்றியது.
அடுத்த நாள் காலையில் கங்கை நதியில் நீராடியதில் கவலை அனைத்தும் அங்கேயே கரைந்தது போல உணர்ந்தேன். அதன் பிறகு காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள சிறப்பாக, காசியில் உள்ள பாரதியார் இல்லத்தைக் கண்ேடாம்.
அது தமிழ்ப் பண்பாடு, விடுதலைப் போராட்டம், ஆன்மீகச் சிந்தனை ஆகியவற்றின் நினைவுத் தலமாக உள்ளது. அங்கே உள்ள கட்டிடங்களில் தமிழ் வார்த்தைகளைப் பார்க்கையில் என்னை அறியாமல் வியந்தேன்.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் சென்றோம். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டிடம், அங்கே உள்ள ஆய்வகத்தில் அந்த மாணவர்கள் செய்த புதிய கண்டுபிடிப்புகள், கலைகள், இவற்றையெல்லாம் பார்க்கையில் மாணவர்களுக்குள் இவ்வளவு திறமை உள்ளதா என ஆச்சரியப்பட வைத்தது. சாரநாத் அருங்காட்சியகம் சென்று, அகழ்வாராய்ச்சி நடக்கின்ற இடம், அங்கே உள்ள பழமையான காட்சிப் பொருட்கள் மற்றும் அசோக சின்னம் அனைத்தையும் நேரில் கண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
அடுத்தநாள் திரிவேணி சங்கமத்தில் நீராடிய தருணம் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய புண்ணியமாக உணர்கிறேன். அங்கே உள்ள சுவாமி நாராயண கோயில் சென்றோம். அதன் வடிவமைப்பும், தோற்றமும் அழகாக அனைவரையும் ஈர்த்துக் கவர்ந்தது.

அடுத்தநாள் காலை ராமர் கோயில் தரிசனம், தர்ம த்வஜம் ஏற்றி ஒரு வாரமே ஆன சூழ்நிலையில் நான் அங்கு சென்று தரிசனம் செய்தது, எனக்கு ஒரு உயிர் தூண்டும் ஆன்மீக அனுபவமாக இருந்தது. அன்று மாலை அருங்காட்சியகத்தில் பனாரஸ் பட்டு ஆடைகள் மற்றும் கம்பளிகள் அனைத்தையும் காணும்போது நமது காஞ்சிபுரம் பட்டுக்கும் அதற்கும் உள்ள தொடர்பை அறியமுடிந்தது.
எல்லா இடத்திலும் நாங்கள் செல்லும் வாகனங்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். எங்கள் வாகனத்திற்கு முன்புறம் காவல்துறை வாகனம் பாதுகாப்புக்காக சென்றது.மாநில அமைச்சருக்கு கொடுக்கப்படும் வரவேற்பைப் போல எங்களுக்கு இருந்தது.
பல்வேறு விதமான அனுபவங்களுடன் அன்று இரவு பனாரஸிலிருந்து அனைவரும் தமிழகத்திற்கு பயணம் புரிந்தோம். காசி தமிழ் சங்கமம் 4.O வின் கடைசி ரயில் பயணத்தை யாராலும் மறக்க முடியாத ஒரு அனுபவம். ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் ஒரு நட்பு உருவானதை இந்தப் பயணம் எடுத்துக்காட்டியது.
மத்திய அரசாங்கத்திற்கும், பாரதப் பிரதமருக்கும், கல்வி அமைச்சகத்திற்கும், உத்தரபிரதேச அமைச்சகத்திற்கும், ஐ.ஆர்.சி.டி.சி.க்கும், ஐ.ஐ.டி. மெட்ராஸ்க்கும், பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
கட்டுரையாளர்: ஆ. பூபதி
சட்டக் கல்லூரி மாணவர்