அரியானா சட்டசபை தேர்தலையொட்டி, கோகனா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இந்திய அரசியல் சட்டம், காஷ்மீருக்கும் பொருந்தும்படி செய்யப்பட்டது. காஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தவை அகற்றப்பட்டன. ஆனால், அன்றிலிருந்து காங்கிரஸ் கட்சியும், அதைப்போன்ற பிற கட்சிகளும் வேதனையில் இருக்கின்றன. அதை குணப்படுத்துவதற்கு மருந்தே கிடையாது. தூய்மை இந்தியா, துல்லிய தாக்குதல் போன்றவற்றை பேசினாலே காங்கிரசுக்கு அந்த நோய் வந்து விடுகிறது. அதிலும், பாலகோட் என்ற பெயரை எடுத்தாலே நோய் அதிகரித்து விடுகிறது.
காங்கிரசுக்கு ஏன் இந்த வேதனை ஏற்படுகிறது என்பது நாட்டுக்கு தெரியும். இது, யார் மீதான அனுதாபம் என்றும் தெரியும். காஷ்மீர் பற்றிய காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள், யாருக்கு உதவுகின்றன? அதனால் பலன் அடைவது யார்? அவை எங்கே பயன்படுத்தப்படுகின்றன? என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். (பொதுமக்கள் ‘பாகிஸ்தான்’ என்று குரல் கொடுத்தனர்).
சரியான விடை. பாகிஸ்தான்தான். இப்போது, பாகிஸ்தான் விரும்புகிற கருத்தை ஏன் பேசுகிறீர்கள் என்பதற்கு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளை உலக அரங்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்கிறது. தனது நிலைப்பாட்டை வலுவாக்க பார்க்கிறது. இந்திய மக்கள் விரும்புவதை சொல்வதற்கு காங்கிரஸ் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.