இட ஒதுக்கீடு குறித்து வா கிழியப் பேசுபவர்கள், இந்த உலகத்தில் இளம் ஜோடிகள் வாழ இடம் கொடுக்க மறுப்பதேன்?
இளவரசன்களும் கோகுல்ராஜ்களும் சங்கர்களும் பலியாக்கப்படுவது யாரால்? ஏன்?
உடுமலைப்பேட்டையில், சமீபத்தில் ஒரு இளம் தம்பதியினருக்கு நடந்த கோர சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளிப்பது மட்டுமல்ல, ‘தமிழ்ச் சமுதாயம் மிக மோசமான சாதியப் பிரிவினைக்குச் சென்று கொண்டிருக்கிறது’ என்பதை உணர்த்துகிறது. ‘சாதி ஒழிப்பு’ என்ற கோஷத்தோடு தமிழகத்தில் கடந்த 40 வருடங்களாக ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகளின் சாதியவாத அரசியலின் பரிணாம வளர்ச்சியையே இது படம் பிடித்துக் காட்டுகிறது. சாதி ஒழிப்பு, சுயமரியாதை, என்ற எந்த இலக்குகளை வைத்து திராவிட இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டனவோ, அதை அடையவில்லை என்பதை விட, மேலும் ஊதி ஊதிப் பெரிதாக்கி, வாக்குகளுக்காக, பதவிக்காக, பணத்திற்காக, அரசியல் அதிகாரத்திற்காக, சமுதாயத்தைப் பிளந்து சமூக ஒற்றுமையைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலைச் செதுவிட்டன என்பதே சமுதாயத்தில் நடக்கும் கௌரவ கொலைகள் உணர்த்துகின்றன. பல்வேறு சமூக அமைப்புகளை வளர்த்து விட்டு, அந்த அமைப்புகளின் தலைவர்களை (?) உருவாக்கி, தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சில சலுகைகளைச் செய்து கொடுத்து, வாக்கு வங்கிகளாக அவர்களை உருவாக்கிய கொடுமை, திராவிடக் கட்சிகளையே சாரும். ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி, மாற்றி, இந்த சாதியக் கட்சிகளைத் தங்களின் கூட்டணியில் இணைத்துக் கொண்டு, அவர்களின் சாதிய வாக்குகள், இந்த இரு திராவிடக் கட்சிகளை விட்டு அகலா வண்ணம் செது வருவது கண்கூடு.
இதற்கிடையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போலவும் எரிகிற கொள்ளியில் எண்ணெ ஊற்றுவது போலவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு சமுதாயத்தினருக்கிடையே மோதலைப் பெரிதாக்கி, சமூகத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி(?) பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து கொண்டு, சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக, மத ரீதியாக, மக்களைத் துண்டாட முயலும் தீய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்குவதற்கு மக்கள் தயாராக வேண்டும்.
‘பன்முகம் கொண்ட இந்தியா’ என்று முழங்கும் முற்போக்குகள், அந்தப் பன்முகம் என்பது சாதிய வாழ்க்கை முறை தான் என்பதை உணர்ந்து கொண்டு, அந்தப் பன்முகத்தை அதன் வழியில் செல்ல விடாமல் சிதைக்கத் துணிந்ததன் விளைவே இந்த சாதிய மோதல்கள். திருமணங்கள் சோர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதே உண்மை. ஆகையால், இரு மனங்கள் இணைகிறபோது, அவர்களுக்கு வழி விட்டு அவர்களை வாழ்த்துவதே பன்முகம் கொண்ட பண்பட்ட சமுதாயங்களின் கலாசாரமாக இருக்க வேண்டும். கோரமுகம் கொண்டு புண்படுத்துவது வாழ்க்கை நெறி அல்ல.
சமூக நீதி காத்தோம்” என்று சோல்லிக் கொண்டவர்கள், சமூக நீதிக்காகப் போராடுகிறோம்” என்று மார் தட்டிக் கொள்பவர்கள், கல்வி, சமூக, பொருளாதார அடிப்படையில் மாற்றங்களை கொண்டு வருவதோடு, சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பதற்கு என்ன செதனர் என்பதற்கு பதில் உள்ளதா? ஒரு சாதி பின்னடைந்து இருக்கும் போது, சாதி ரீதியான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல ஆயிரம் கோடியில் புரள்வது எப்படி என்று யாரேனும் சிந்தனை செததுண்டா? சாதிய முறை கொண்ட வாழ்க்கையில் நாம் பின்னிப் பிணைந்திருப்பது உண்மை தான் என்பதை உணர்ந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, வாழ்க்கை முறைகளில் மாற்றம் வரும்போது அதைப் பின்பற்றும் முறையையும் கற்றுகொள்ளச் செவதே மக்களுக்காக இருப்பதாகச் சோல்லிக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் கடமை.
வாக்குகளைக் குறிவைத்தே இயங்கும் அரசியல் கட்சிகளும் வாக்கு வங்கிகளாகச் செயல்படும் சாதிய அமைப்புகளும் புறந்தள்ளப்பட வேண்டும். பள்ளிகளில் சீருடை என்பதே சாதிய வேறுபாடுகளை அழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது என்பதை உணராமல், தென் மாவட்டங்களில் மாணவர்களின் சீருடைகளில், சாதிகளை அடையாளம் காண வண்ணப் பட்டைகளை கட்டிவிட்டு பிஞ்சு உள்ளங்களில் சாதி வெறியை ஏற்றிய கொடுமைகளைக் கண்டிக்காததும் அவை தொடர்வதுமே ‘நாங்கள் பலம் வாந்தவர்கள்’ என்று பறைசாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் சாதி சார்ந்த அரசியல் சூழ்ச்சியின் வெளிப்பாடு.
கல்வியால் திருத்த முடியாத தீண்டாமையை, சமூக அந்தஸ்தால் திருத்த முடியாத தீண்டாமையை, பொருளாதார மேம்பாட்டால் திருத்த முடியாத தீண்டாமையை, தங்கள் கொள்கைகளால், முயற்சியால், செயல்பாடுகளால், அரசியல் கட்சிகள் மட்டுமே திருத்த முடியும். அதைச் சாதிகளை ஒன்றிணைப்பதன் மூலமே முன்னெடுத்து செல்ல முடியும். அந்த ஒன்றிணைப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதே வேளையில், அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பத்தின் மூலமே ‘கோரமுகமாக’ இருக்கும் ‘பன்முக’ சாதியை ‘மென்முக’ சாதியாக நிலைநிறுத்தி, ‘ஒருமுக’க் கலாசாரத்தை உருவாக்குவோம்.