கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டி ஐ.ஜே.கே., பாரிவேந்தர் தகவல்

‘வரும் லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்,’ என்று ஐ.ஜே.கே., கட்சி நிறுவனரும், பெரம்பலுார் எம்.பி.,யுமான பாரிவேந்தர் தெரிவித்தார். பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், அதன் பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த நான்கரை ஆண்டுகளில், தேர்தலின் போது, மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டேன். இதற்கு முன் இருந்த எம்.பி., அதை செய்யவில்லை. சாதனைகள் குறித்து புத்தகம் வெளியிட உள்ளதோடு, இந்த முறை பெரம்பலுார் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை.

சொந்த ஊர் ஆத்துார் என்பதால், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, அங்குள்ள மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை. கடந்த தேர்தலில் நண்பர்களாக இருக்கலாம் என நினைத்து கூட்டணி வைத்தோம்; அது நடைபெறவில்லை. கொள்கை ரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் 100 சதவீதம் வித்தியாசம் இருப்பதால், நான் வெளியே வந்து விட்டேன். தி.மு.க.,வினர் எப்பொழுதுமே வியாபாரிகளாகவே செயல்படுவர். அவர்கள் வியாபாரிகள், அதிக லாபம், போட்டியில் தாங்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும்; வேறு யாரும் போட்டியிடக் கூடாது என நினைப்பவர்கள்.

அது இந்த ஆட்சியில் வழக்கமான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. மக்களின் வரிப்பணத்தை தி.மு.க.,வினர் சொந்த குடும்பத்திற்காகவே செலவு செய்கின்றனர். அவர்களுடன் கூட்டணி அமைத்ததில், நாங்கள் தெரிந்து கொண்டோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் அமைந்த கூட்டணி முடிவுக்கு வந்து விட்டது. வரும் தேர்தலில், தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். அ.தி.மு.க., – பா.ஜ.,வுடன் இணைந்து வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

இவ்வாறு அவர்தெரிவித்தார்.