கலாச்சார தேசியத்துக்கோர் கவசம் பாரதிய அரசியல் சாஸனம்

அரசியல் சாஸனத்தை ஏமாற்றும் கும்பலின் நாள்பட்ட சதியை அரசியல் சாஸனத்தின் அமுத விழா நேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. பட்டியல் சமூக நபர் (எஸ்.சி) ஹிந்துவாக இருக்கும் வரை தான் அவருக்கு எஸ்.சி இடஒதுக்கீடும் சலுகைகளும். கிறிஸ்தவராகவோ முஸ்லிமாகவோ மதம் மாறிவிட்டால் அது கிடையாது. அரசியல் சாஸனம் தரும் இந்த தெளிவான இடஒதுக்கீட்டை மதம் மாறிய நபர் (தன் புது மத அடையாளத்தை மறைத்து) தட்டிப்பறிப்பது ஒண்ணாம் நம்பர் மோசடி. பட்டியல் சமூக மக்கள் இதை திட்டவட்டமாக எதிர்த்து வருவது பொதுவெளியில் பதிவாகியுள்ளது: (https://www.thehindu.com/news/cities/Kochi/dalit-bodies-put-up-stiff-resistance-against-bestowing-sc-status-on-converts/article68472483.ece). அப்படி இருக்க 2023 செப்டம்பரில் ஸ்டாலின் அரசு “தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கீடு மறுக்கப்படுவதை எதிர்த்து” சட்டமன்ற தீர்மானம் (பாஜக எம்எல்ஏக்களின் கண்டன வெளிநடப்புக்கிடையே) நிறைவேற்றியது, பட்டியல் சமூக மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம். இதோ இந்த செய்தியைப் படியுங்கள்:

 

உச்சநீதிமன்றம்

“இட ஒதுக்கீடு பெற மத மாற்றமா? அனுமதிக்க மாட்டோம்”

கிறிஸ்தவ மதத்திற்கு  மாறிய  பெண் ஒருவர், தன்னை ஹிந்துவாகக் கூறி, தன்னுடைய ஒதுக்கீடு நலன்களை பெற முயற்சி செய்த வழக்கில், உச்சநீதி மன்றம், “இந்த வித நடவடிக்கை ஒதுக்கீடு கொள்கையின் நோக்கத்தையே  பாதிக்கும்” எனத் தெரிவித்தது.

நீதிபதிகள் பங்கஜ் மிட்டல்,
ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, “இட ஒதுக்கீடு நலன்களை பெற மத மாற்றத்தை மேற் கொள்ளும் ஒருவரின் நோக்கம் சமூக நீதிக் கொள்கையை கேள்விக்கு உள்ளாக்கும்” என்று தீர்ப்பளித்தது.

அவர்கள் மேலும்  “ஒவ்வொரு குடியுரிமையாளருக்கும் அவரது விருப்பத்திற்கேற்ப மதத்தை பின்பற்றும் உரிமை அரசியலமைப்பின் 25 வது பிரிவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது; ஆனால், இட ஒதுக்கீடு நலன்களை பெற வேண்டும் என்பதற்காகவே மத மாற்றம் நடப்பதை அனுமதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தனர்.

“இந்த வழக்கில், புகாரளித்தவர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என்றும், தன்னை ஹிந்து எனக் கூறி, சாதி ஒதுக்கீடு சான்றிதழ் பெற முயற்சி செய்தார்” என்றும் நீதிமன்றம் கூறியது.

“இத்தகைய இரட்டை தரவுகளை அங்கீகரிக்க முடியாது. இடஒதுக்கீடு சமூக நீதி கொள்கையின் அடிப்படையான நோக்கத்திற்குப் புறம்பாக இது இருக்கும்,” என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

பட்டியல் சமூக மக்களின் உரிமை பறிபோவதா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஹிந்து முன்னணி அனைத்து ஹிந்து மக்களின் சார்பாக மனதார வரவேற்கிறது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள், மதம் மாறிய பிறகும் தங்களை ஹிந்து எனக் கூறிக்கொண்டு மோசடியாக சலுகைகளை அனுபவித்து வருவதை தடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி நெடுங்காலமாக எடுத்துக் கூறி வந்துள்ளது.

தமிழகத்தில்  மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலி சாதி சான்றிதழ்களை  தமிழக அரசு தானாக முன்வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதனடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள போலி நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் உண்மையான பட்டியல் சமூக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத் தரவேண்டும் எனவும் ஹிந்து முன்னணி வலியுறுத்துகிறது.

 

 

பா.ஜ.க கோரிக்கை

போலிகளைக் களையெடு

“தமிழகத்தில் போலியாக பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறினார்.

“பேச்சுக்கு பேச்சு அரசியல் சாஸனத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.” இவ்வாறு தமிழக பாஜகவின் பிரசாத் தெரிவித்துள்ளார்.

செல்வராணி வழக்கு

புதுச்சேரியைச் சேர்ந்தவர் செல்வராணி. கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இவர், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் கிளார்க் பணியிடத்துக்காக பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் எனக் கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார். ஜாதிச்  சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து செல்வராணி, தனது தந்தை ஹிந்து பட்டியல் சமூகத்தவர் என்பதால், தனக்கு பட்டியல் சமூக ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரியுள்ளார். அவரது விண்ணப்பத்தை புதுச்சேரி அரசு அதிகாரிகள் நிராகரித்தனர். செல்வராணியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

செல்வராணி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு மாறுவது என்பது அதன் கொள்கைகள் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்கப் பட்டிருக்க வேண்டும். உண்மையான நம்பிக்கை இல்லாமல், இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதற்காக மட்டும் மதம் மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது போன்ற மறைமுக நோக்கங்கள் இடஒதுக்கீட்டு கொள்கையையே கேலிக் கூத்தாக்கி விடும். மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும்போது, அரசு வேலைவாய்ப்புக்காக ஹிந்துவாக தன்னை அடையாளப்படுத்த  முற்படுவதை ஏற்க முடியாது. மேலும் அது அரசியல் சாஸனத்தையே மோசடி செய்வதற்கு சமம்’’ என தீர்ப்பளித்துள்ளது.

நடவடிக்கை எடு

“மதம் மாறி பத்தாண்டுகள் ஆனவர்கள் கூட, ஹிந்து பட்டியல் சமூகத்தவர் என்று சான்றிதழ் பெற்றுக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். அரசு வேலைகளில் மட்டுமல்லாது, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியல் சமூகத்தவர்களுக்கான இடங்களில், மதம் மாறியவர்கள் போலிச் சான்றிதழ் பெற்று போட்டியிடுகின்றனர். இதனால், உண்மையிலேயே பட்டியல் சமூகத்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னை மேயர் தேர்தலிலும், பல்வேறு சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பட்டியல் சமூகத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் மீது சர்ச்சை எழுந்தது. இது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.”

“பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனத்தின் இடஒதுக்கீடு, முறையாக பட்டியல் சமூக மக்களுக்கு போய்ச் சேருவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு தமிழக பா.ஜ.க கோரியுள்ளது.