கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி ஒரு விஷப் பாம்பு போன்றவர் என பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகாவில் பிதார் மாவட்டத்தில் ஹம்னாபாத் நகரில் நடந்த பா.ஜ.க பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஏழைகளின் போராட்டத்தையும் வலியையும் காங்கிரஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளாது. பா.ஜ.க அரசு, பல பெண்களுக்கு வீட்டின் சொந்தக்காரர்களாகும் உரிமையை வழங்கி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் அத்திட்டத்தின் வேகம் குறைக்கப்பட்டது. அக்கட்சி மீண்டும் என்னை திட்ட தொடங்கி உள்ளது. ஒவ்வொரு முறை என்னை திட்டும்போதும், அக்கட்சி அழிந்து போகிறது. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் என்னை அவமானப்படுத்தும் போதும் அதற்கு தண்டனை கிடைக்கும். காங்கிரஸ் என்னை 91 முறை அவமானப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் இப்படி துஷ்பிரயோகங்கள் குறித்த அகராதியை உருவாக்குவதற்கு பதிலாக, மக்களுக்கு நல்லாட்சி வழங்கியிருந்தால் அவர்களின் நிலை இப்போது உள்ளது போல பரிதாபமாக இருந்திருக்காது. நாட்டின் ஜாம்பவான்களைக் கூட காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை, அனைவரையும் துஷ்பிரயோகம் செய்துள்ளது அக்கட்சி. சட்டமேதை பாபா சாகிப் அம்பேத்கர், மாபெரும் சுந்ததிர போராட்ட வீரர் சாவர்க்கர் ஆகியோரையும் காங்கிரஸ் அவமதித்தது. இப்போது அவர்கள் அதையே என்னிடமும் செய்கிறார்கள். அவ்வகையில், அதே வரிசையில் என்னையும் கருதியதற்கு நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் என்னைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்வார்கள். ஆனால், நான் தேச சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன். இந்த முறை, கர்நாடக மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். இதற்கு அவர்கள் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.