கர்நாடக மாநிலம் பல்லாரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ரெயில் தாமதத்தால் 600 மாணவ-மாணவிகள் கர்நாடகத்தில் நேற்று ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் திரும்பினர். காலை 6:20 மணிக்கு பெங்களூரு வரவேண்டிய ரெயில் மதியம் 2:30 மணிக்கு சென்றது. இதன் காரணமாக காரணமாக மாணவர்களால் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள் தேம்பி,தேம்பி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
பின்னர் அவர்கள் பெங்களூருவில் இருந்து தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் தேர்வு எழுத முடியாத சில மாணவ-மாணவிகள் தங்களுடைய நிலை குறித்து, மத்திய ரெயில்வே மந்திரிக்கு டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் தாங்கள் மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுத நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கோரிக்கை விடுத்தனர். பலரது தரப்பில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வட கர்நாடகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெங்களூருவில் நடந்த நீட் தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். ஹம்பி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக வந்தது தான் இதற்கு காரணம். மேலும் தேர்வு மையம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட தகவல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை.
இதனால் பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர். இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் பிரதமர், ரெயில்வே மந்திரி ஆகியோர் தலையிட வேண்டும். தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் ரெயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுத முடியாமல் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.