இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் ஒன்று கனிம வளம். ஆனால் நாம் அவற்றை பாதுகாக்க தவறியதாலும் அரசின் அலட்சியத்தாலும் ஆறுகளிலும் கடற்கரை ஓரங்களிலும் உள்ள தாது மணல் சில தனிநபர்களாலும் தனியார் நிறுவனங்களாலும் சட்டத்திற்கு புறம்பாக கொள்ளை அடிக்கப்படுகின்றன.
இவற்றை வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோர பகுதியில் உள்ள மணலில் கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்களும், தாதுக்களும் உள்ளதால் அவற்றை மாலத்தீவு, இலங்கை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சில நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றுமதி செய்து வருகின்றன.
இது சம்பந்தப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மணல் கொள்ளையை தடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. தமிழக அரசு 2013–14 காலத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்த குழு மணல் கொள்ளை சம்பந்தமான ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
தமிழகத்தில் காவிரி, பாலாறு தாமிரபரணி போன்ற ஆற்றுப்படுகையில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் குறைந்து அடுத்த தலைமுறைக்கு நீர் பற்றாக்குறையை ஏற்படும். மேலும் விவசாயம் முற்றிலும் நீர் ஆதாரம் இல்லாமல் பாதிக்கப்படும். மழைக்காலங்களில் அதிக நீர்வரத்து காரணமாக ஆற்றின் பாதை மாறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்படும்.
கடற்கரையோர மணல் திருடப்படுவதால் மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகந்து பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஆற்று படுகைகளில் உள்ள மணல்கள்தான் நீரை தாங்கி, தேக்கி நிலத்தினுள் அனுப்புகின்றன. அவை அள்ளப்படும்போது வீட்டு குழாய்கள் திறந்தவுடன் சட சடவென கொட்டித் தீர்ப்பது போல ஓடி வரும் மழைநீர் விரைவாக கடலுக்குள் கொண்டு சேர்ந்து விடுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுகிறது.
இவ்வாறாக தமிழ்நாட்டில் கனிம வளங்களை, தாது மணல்களையும் சுரண்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. மணல் கொள்ளை தவிர்க்க முடியாததாகி உள்ளது. இவற்றை தடுக்கும் நேர்மையான அரசு அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். மணல் கொள்ளையால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் நடத்தியும், நீதிமன்றம் ஆணையிட்டும், அரசு குழு அமைத்தும் இன்று வரை இந்த மணல் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
சட்ட விரோதமாக மணல் திருடிய நிறுவனங்களிடமிருந்து அதிக தொகையை அபராதமாக வசூலித்து அவற்றை விவசாயத்திற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் நிலத்தடி நீரை காக்க அரசு தொலைநோக்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.