“கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன்” – ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி

“உண்மையில் நான்தான் அதிர்ஷ்டசாலி”  என அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை  வடிவமைத்த சிற்பி கூறியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிற்பி அருண் யோகிராஜ், “இப்போது நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன். இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்த 1949-ம் ஆண்டில் ராம ஜென்ம பூமியில் குழந்தை ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த வெள்ளி சிலையின் உயரம் 6 அங்குலம் ஆகும். ராமரின் தம்பிகள் மற்றும் அனுமனின் சிலைகள் இதைவிட உயரம் குறைவாக உள்ளன. புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலில் பக்தர்கள் சுமார் 19 அடி தொலைவில் இருந்து குழந்தை ராமரை வழிபட முடியும். அவ்வளவு தொலைவில் இருந்து 6 அங்குலம் உயரம் கொண்ட குழந்தை ராமரை தெளிவாக பார்க்க முடியாது.

எனவே கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ், கணேஷ் பட் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த சத்யநாராயண் பாண்டே ஆகியோர் குழந்தை ராமர் சிலைகளை செதுக்கினர். கர்நாடகாவை சேர்ந்த இரு சிற்பிகள் கருங்கல்லிலும் ராஜஸ்தானை சேர்ந்த சிற்பி மார்பிள் கல்லிலும் சிலைகளை உருவாக்கினர். இறுதியில் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.

இந்த சிலையின் உயரம் 4.5 அடியாகும். சுமார் 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. பழைய 6 அங்குல குழந்தை ராமரின் சிலை, புதிய சிலைக்கு வலதுபுறத்தில் ஆகம விதிகளின்படி அயோத்தியில் நிறுவப்பட்டது.