அன்று வழக்கத்திற்கு மாறாக எட்டு மணி ஆகியும் ராமாத்தாள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. இதை கவனிக்காமல் ரவியும் தூங்கிக்கொண்டு இருந்தான். எப்போதும் பள்ளிக்கு ரவியுடன் சேர்ந்தே போகும் ராகுல் தோளில் புத்தகப்பையை மாட்டிக்கொண்டு ரவியின் வீட்டிற்கு வந்தான். வீடு பூட்டியிருப்பது போல் தோன்றியது. அருகில் வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருப்பதை அறிந்து கதவைத் தட்டினான். யாரும் திறக்கவில்லை. காற்றுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த சன்னலின் வழியாக பார்த்தபோது தாயும் மகனும் ஆளுக்கொரு பக்கமாகப் படுத்திருப்பது தெரிந்து, ஒரு சிறு கல்லினை எடுத்து ஜன்னலின் வழியாக ரவியின் மீது வீசினான்.
திடுக்கிட்டு எழுந்த ரவி முழுமையான தூக்கம் கலையாமல், யாருடா என்ன அடிச்சது?” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான். ஜன்னலுக்கு வெளியே ராகுல் சீருடையுடன் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாகச் சென்று கதவைத் திறந்தான். ஏண்டா, நேரத்திலயே கிளம்பி வந்துட்ட. என்னடா அவசரம்” என்றான்.
போடா, டே! மணி எட்டுக்கும் மேலாச்சு, இன்னக்கி தமிழய்யா சிறப்பு வகுப்புக்கு எட்டரை மணிக்குள்ள வரச்சொல்லியிருக்காரு. அது தெரியாம என்னடா தூக்கம் வேண்டிக் கிடக்கு” எனக் கோபத்துடன் ராகுல் பேசினான்.
ரவி தூக்கத்தில் கும்பகர்ணனையே விஞ்சி விடுவான். படிப்பதை விடப் படுத்துத் தூங்குவதே அவனுக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூடம் மட்டும் அம்மாவின் விருப்பத்திற்காகச் செல்வான். பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருந்தும் ரவி படிப்பதில்லை.
அய்யையோ! நான் காலையில ஆறு மணிக்கே எழுப்பச் சோல்லி, எங்கம்மா கிட்ட சொன்னன்டா” எனச் சொல்லிவிட்டு ராமாத்தாள் படுத்திருந்த இடத்திற்கு வந்தான்.
ஏம்மா இன்னியுமா தூங்கிகிட்டு இருக்க. நேரமா நான் எந்திருக்கலைனு தினமும் திட்டுவியே. நீ மட்டும் இன்னக்கிப் புதுசா இவ்வளவு நேரம் தூங்கறியே” என்று சொல்லிக்கொண்டே தட்டியெழுப்பக் கை வைத்தபோது, உடல் சில்லிட்டுக் கிடந்தது. ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து, அயோ! அம்மா” எனக் கதறினான். சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ராமாத்தாள் இறந்ததைத் தெரிவித்தனர். கதறித் துடித்தான் ரவி. விவரம் தெரியாத வயதில் தந்தையைப் பறிகொடுத்தவன் இப்போது தாயையும் இழந்துவிட்டான். ரவிக்கு உறவினர்கள் யாருமில்லாத சூழலில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ராமாத்தாளை நல்லடக்கம் செய்தனர். தங்களால் முடிந்த உதவிகள் செய்தனர்.
மறுநாள் ரவி பள்ளிக்கு வராததை அறிந்த தமிழாசிரியர் ராகுலுடன் ரவியின் வீட்டிற்கு வந்தார். ஆசிரியர் தன் வீடு நோக்கி வருவதைப் பார்த்த ரவி, அய்யா! எங்கம்மா என்னை விட்டுட்டுப் போயிட்டாங்கய்யா” என்றழுதான். ஆசிரியர் ஆறுதல் படுத்தினார்.
இறப்புங்கறது, வாழ்க்கையில் எல்லா உயிருக்கும் வரும். நீ வருத்தப்படாத. உன்னோட அம்மா உனக்குத் தெரியாம உன் கூடவே இருப்பாங்க. படிக்கிறது உன் எதிர்காலத்துக்கு ரொம்ப முக்கியம். படிப்பு மட்டுந்தான் நமக்குத் துணை” என்றார். ரவியின் அம்மா உயிருடன் இருந்தபோது, சாமி, நல்லா படிப்பா. படிப்பு மட்டுந்தான் ஒனக்கு தொண. நீ நல்லாப் படிச்சு பெரியாளா வரனும். அதுக்குத்தான் நானும் உசிரக் கையில புடிச்சிட்டு இருக்கேன்” என்பாள்.
ஆசிரியரின் பேச்சு அம்மாவை நினைவுபடுத்தியது. ஆசிரியரிடம், அய்யா! நா நல்லாப் படிக்கணுன்னு எங்கம்மாவுக்கு ரொம்ப ஆசை, நான் படிக்க உதவுங்க அய்யா” என்றான். சரிவரப் படிக்காத ரவியின் பேச்சு ஆசிரியருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ரவியின் படிப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு உதவுவதாகக் கூறினார். மேலும், உங்கம்மா அவங்க கண்ண மூடிட்டு, உன்னோட கண்ண திறந்திட்டாங்க” என்றவாறு ரவியைத் தழுவிக் கொண்டு தன்னுடன் அழைத்துச் சென்றார்.