கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 60 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே இப்பதவி வகிக்க முடியும் என்பதால் இந்த நியமனத்தை ரத்துசெய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மறு நியமனம் உறுதி செய்யப்பட்டது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில் கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனை மீண்டும் நியமிக்கும் கேரள அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. மேலும் மறுநியமனத்தை உறுதிசெய்த கேரள உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “ஒரு மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பதவி வழியாக ஆளுநரே வேந்தராக இருக்கிறார். பல்கலைக்கழகத்தின் அனைத்து விஷயங்களிலும் மாநில அமைச்சரவையை சார்ந்திருக்காமல் வேந்தர் என்ற முறையில் ஆளுநரே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கிறார். ரவீந்திரன் நியமனத்தை ஆளுநர் வெளியிட்டிருந்தாலும் அவரது முடிவில் மாநில அரசின் தேவையற்ற தலையீடு உள்ளது” என்று கூறியுள்ளனர்.