பாரத நாட்டில் அவதாரபுருஷர்கள், மகான்கள், மகரிஷிகள், ரிஷிகள், முனிகள் போன்றோர் தோன்றினார்கள். வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை பாரதத்திற்கு உண்டு. அப்பேற்பட்ட அவதார
புருஷர்களில் ஒருவர் தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
‘எல்லாம் வல்ல இறைவனே ஸ்ரீகிருஷ்ணர் ரூபத்தில் வந்திருக்கிறார். அவர் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை’ என்று பாகவதம் கூறுகிறது.
சில முக்கிய லீலைகளைப் புரிய கடவுளே மனிதனாக அவதரித்து வருகிறார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தது தர்மத்தை நிலைநாட்டவும், தீயவர்களை அழிக்கவும் மட்டுமல்ல மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டும் உயர்ந்த நோக்கத்துடன் அவதரித்தார். நாம் எப்படி வாழ வேண்டும், வேலை செய்ய வேண்டும், எவ்வாறு பழக வேண்டும் இவை அனைத்தையும் பகவான் கீதையில் கூறியுள்ளார்.
பெரியவர்கள், பதவியில் இருப்பவர்கள், உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ மற்றவர்களும் முயற்சிப்பார்கள். இவர்களின் வாழ்க்கையையே மற்றவர்களும் பாதையாக எடுத்துக் கொள்வார்கள். இதனால் பெரியவர்களின் பொறுப்பு அதிகம் இதை உணர்ந்து பெரியவர்கள் வாழவேண்டும் என்று கூறி அதைப்போல வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
மகான்களைப் பார்த்து வாழ முயல்வதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை. அந்த வகையில் நாம் பகவானின் குணங்கள் ஒருசிலவற்றை அறிந்துகொள்ள முயலுவோம்.
- மென்மையும் வைரமும் படைத்தவர்: அவர் அன்பான மென்மையும் கருணையும் பூப்போன்ற இதயமும் கொண்டவர். அதே நேரத்தில் தேவைப்பட்டால் எதிரிகளை அழிப்பதற்காக வைரம்போல உறுதியாக மாறும் தன்மையும் கொண்டவர். கெட்ட குணங்களை அழிக்கும்போது நாம் உறுதியாக இருந்து அவற்றை ஒழித்துவிட வேண்டும்.
- மாபெரும் சக்தி படைத்தவர்: மிகுந்த சக்தி வாய்ந்தவர்; ஆனால் சண்டைப் பிரியர் அல்ல; சமாதானப் பிரியர். ஆனால் வந்த சண்டையை விட மாட்டார். மனிதனிடம் வலிமை அதிகம் இருந்தால் பிறரிடம் தனது வலிமையைக் காண்பிப்பான். அதிலும் அவனை விட வலிமையானவர்களை அடிக்க மாட்டான். பலம் குறைந்தவர்களையே அடிப்பான். அது வீரமே அல்ல.
‘கிருஷ்ணா உன்னால்தான் யுத்தம் நடக்கிறது’ என்று பலராமன் கூறினான். ஆனால் அது உண்மை அன்று. பகவான் சமாதானத் தூதுவராகவும் சென்றார். கௌரவர்கள் ஏற்கவில்லை.
- ராசலீலை : அவர் ராசலீலை புரிந்தார். ஆனால் பெண்கள் பின்னால் அலைந்தவர் அல்ல. பலரும் கிருஷ்ணரே பெண்கள் பின்னால் அலைந்தாரே என்று அதன் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் குறை கூறுவர்.
ஒருமுறை 80 வயதான பணக்காரர் ஒருவர் இளவயதுப் பெண்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். நாராயணபட்டத்திரி இதைப் பார்த்து, கோபத்துடன், “உங்களுடைய வயதிற்கு இதைச் செய்யலாமா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த வயதானவர், “கிருஷ்ணர் மட்டும் ராசலீலை புரிந்தாரே நான் செய்யக்கூடாதா?” என்றார்.
அதற்கு நாராயண பட்டத்திரி கூறினார்: “இதை மட்டும் ஏன் செய்கிறீர்கள்? பகவான் மலையைத் தூக்கினார், அரக்கர்களைக் கொன்றார், திரௌபதிக்கு சேலை கொடுத்தார். நீங்களும் கொடுக்கலாமே.. ஏன் இந்த ஒரு செயலை மட்டும் செய்கிறீர்கள்?”
இதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்குத் தனது உண்மை நிலை புரிந்தது. அவர் மனம் மாறி தன் வாழ்வை சரியான வழியில் அமைத்துக் கொண்டார்.
- ஆசையற்றவர்: கிருஷ்ணரைத் தேடி அதிகாரம், பதவி வந்தது. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளாத உயர் எண்ணம் படைத்தவர். கம்சன் இறந்தபின் அவரே அரசன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனது தந்தை உக்கிரசேனரை மன்னராக்கினார். ஜராசந்தன் இறந்து போனான். அப்பொழுதும் அவரே ராஜாவாகி இருக்கலாம். ஆனால் அவனது மகனான சகதேவனை ராஜாவாக்கினார்.
- பெரியவர்களிடம் மரியாதை: கிருஷ்ணர் காலையில் முதலில் எழுந்ததும் தனது பெற்றோருக்கும் அண்ணன் பலராமனுக்கும் மரியாதை செலுத்திவிட்டுத்தான் அடுத்த வேலை செய்வார். குந்திதேவிக்கும் வசுதேவருக்கும் இதேபோல் மரியாதை செய்வார். இவ்வாறு பெரியவர்களுக்கு மரியாதை செய்வதால் மனம் தூய்மையடையும் என்கிறது சாஸ்திரம்.
- பொறுமை: மானத்தையும் அவமானத்தையும் சமமாகக் கொண்டு விவேகி ஆனவன் வாழ்வான். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். சிசுபாலன் பகவானை சபையில் அவமானப்படுத்தும் போதும் பகவான் அவனது அம்மாவிற்குக் கொடுத்த வாக்கிற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டார். வாக்குக் கொடுத்ததற் கேற்ப 100 முறை நிந்தனை முடிந்த பிறகே சிசுபாலனை வதம் செய்தார்.
- விபூதி வல்லமை: இதை எல்லோராலும் செய்ய இயலாது. கோவர்த்தன மலையைத் தூக்கினார். திரௌபதிக்குச் சேலை கொடுத்தார். குப்ஜா என்ற கூனியை நேராக்கினார். இது போன்ற பல நிகழ்ச்சிகளை பாகவதத்தில் பார்க்கிறோம். இவ்வளவு செய்தாரே ஒழிய விபூதிக்கெல்லாம் அவர் வசப்படவில்லை.
- சமயோசித புத்தி: திருதராட்டிரன், யுத்தம் முடிந்த பின் தர்மர், அர்ஜுனன் போன்ற அனைவரையும் ஆசிர் வதித்தார். பீமனை அழைத்தார். ஆனால் கண்ணன் பீமனை அனுமதிக்கவில்லை. அதற்குப் பதில் ஓர் இரும்புச் சிலையை அங்கு வைத்தார். யுத்தத்தில் தனது 100 மகன்களைக் கொன்ற பீமன் மீது அவர் கடும் கோபத்தில் இருந்தார். அவனை அணைத்து நொறுக் கிக் கொல்லத் திட்டமிட்டார். ஆனால் கண்ணனின் சமயோஜி தால் பீமன் காப்பாற்றப்பட்டான். சமயோஜித புத்தி இல்லாதவர்கள் நிறையப் படித்திருந்தாலும் எப்பொழுது யாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது.
- சமத்துவம்: எந்த வேலை செய்தாலும் சமமான கவனம் கொடுக்க வேண்டும். பகவான் கூறுகிறார்: ‘மூன்று உலகிலும் எனக்கு எந்த வேலையும் கிடையாது. ஆனாலும் நான் வேலை செய்கிறேன்.
‘ஏன், என்னைப் பார்த்து உலகமும் வேலை செய்யும். நான் வேலை செய்யாமல் இருந்தால் அவர்களும் வேலை செய்யமாட்டார்கள். நான் அடைய வேண்டியது எதுவும் இல்லை எனினும் உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்பதற்காக நான் வேலை செய்கிறேன்.’
வேலைகளில் உயர்ந்தது தாழ்ந்தது கிடையாது. ஆனால் செய்வதில் உயர்வு தாழ்வு உண்டு. கிருஷ்ணர் தனது வாழ்வில் எல்லா வேலைக்கும் சமமான மதிப்பு தருகிறார். ஒரு மகனாக, சகோதரனாக, நண்பனாக, தேரோட்டியாக எல்லா இடங்களிலும் தனது கடமையை ஒழுங்காக ஆற்றினார்.
- பக்திக்கு வசப்படுபவர்: பக்தி எங்கு இருக்கிறதோ அங்கு தேடி வருபவர். கீதையில் கூறுகிறார், யார் என்னை நினைத்திருக்கிறார்களோ, யார் என்னிடம் பொறுப்பு முழுவதையும் ஒப்படைத்திருக்கிறார்களோ,யாருக்கு என்னைத் தவிர வேறு எதையும் நினைக்கத் தெரியாதோ அவர்களின் பொறுப்பு முழுவதையும் நானே ஏற்கிறேன். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நானே சுமந்து கொண்டு போகிறேன்.’
இதுபோன்ற எண்ணற்ற மகத்தான குணங்களைக் கொண்ட ஒரு மகாபுருஷரை நாம் நமது வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தோமானால் நமது சாதாரண வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை ஆகிவிடும். அவரது புகழ் பாடுவதுடன் நின்றுவிடாமல் அவரது அந்தப் புகழுக்குக் காரணமான குணங்களையும் நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுது நமது வாழ்க்கை மற்றவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.