உலகம் முழுவதும் மார்க்சிஸம் காலாவதியாகிவிட்டது. சில நாடுகளில் பெயரளவில் இருந்தபோதிலும் கூட மார்க்சிஸம் நீர்த்துப்போய்விட்டது. ஆனால் கேரளாவில் கொலைவெறி அரசியலை நடத்திவரும் மார்க்சிஸ்டுகள், சமீபத்தில் பெற்ற தேர்தல் வெற்றியை அடுத்து ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் மீதான தாக்குதலை உக்கிரப்படுத்தியுள்ளனர்.
கேரள மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கிவிட்டனர். மார்க்ஸிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துவிட்டது. எனினும் அதன் வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது. பாஜக பெற்ற வாக்குகள் இடதுசாரி ஜனநாயக முன்னணியையும் ஐக்கிய ஜனநாயக முன்னணியையும் கலங்கடித்துவிட்டன. இதனால்தான் தேர்தலின்போதும் வாக்கு எண்ணிக்கையின் போதும் வன்முறையில் மார்க்சிஸ்டுகள் ஈடுபட்டனர்.
கன்னூர் மாவட்டத்திலும் திருச்சூர் மாவட்டத்திலும் வன்முறை உச்சகட்டத்தை எட்டியது. ஏனெனில், இந்த இரண்டு மாவட்டங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றுள்ளது.
முதல்வரின் சொந்த ஊரான பினராயி கிராமத்தில், மார்க்சிஸ்டுகள் வெற்றிவிழா கொண்டாட்டங்கள் நடத்தினார்கள். இதில் வெடி வெடித்ததில் விபத்து நேரிட்டது. இது தற்செயலான நிகழ்வு. ஆனால் இதற்கு பாஜக தான் காரணம் என்று வீண் பழி சுமத்தினார்கள். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரமோத் என்ற 33 வயது பாஜக இளைஞரை கல்களாலும் செங்கல்களாலும் மார்க்சிஸ்டுகள் சரமாரியாகத் தாக்கினார்கள். இதர ஆயுதங்களையும் பயன்படுத்தினார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரமோத்தின் உயிர் பிரிந்துவிட்டது.
காப்பமங்களம் தொகுதியில் வெற்றிபெற்ற இடதுசாரி ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஈ.டி. டைசன் வன்முறையை தூண்டிவிட்டார். அவரே வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார். கேரளாவில் உள்ள இடதுசாரி அணியைச் சேர்ந்த மார்க்சிஸ்டுகள் வன்முறையில் ஈடுபடுவது புதிதல்ல. அவர்களது வழிமுறையே இதுதான். ஆனால், பாஜகவினர் இப்போது வலுவாக காலூன்றி விட்டதால் மார்க்சிஸ்டு வன்முறையை முறியடிக்கவேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர். மார்க்சிஸ்டுகளுக்கு பாடம் புகட்டியே தீருவோம் என்பதில் பாஜக நிர்வாகிகள் திடமாக உள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி தலைமையில், பாஜக நிர்வாகிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மே 22 அன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். தேர்தல் வெற்றிவிழா கொண்டாட்டத்தின்போது மார்க்சிஸ்டுகளால் தாக்கப்பட்டதில் உயிர் இழந்த பாஜக தொண்டருக்கு நீதி வழங்கவேண்டும், என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். வடகரா தொகுதியில், மார்க்சிஸ்டு கட்சியிலிருந்து பிரிந்து சென்று இயங்கிவரும் புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கே.கே. ராமாவை மார்க்சிஸ்டுகள் மிருகத்தனமாகத் தாக்கினார்கள்.
வாக்குப்பதிவு நாள் அன்று நீலேஸ்வரத்தில் உள்ள சதமத் வாக்குச்சாவடியில் ஏஜெண்டுகளாக இருந்த பாஜக நிர்வாகிகள் இரண்டு பேரை மார்க்சிஸ்டுகள் தாக்கினார்கள். திரிகரிப்பூர் தொகுதியில் இடதுசாரி கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.குன்னிராமனும் இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டார்.
மலபார் பகுதியில், ஆர்.எஸ்.எஸ்ஸினர் பாஜகவினர் பலர் தேர்தல் நாளன்று குறிவைத்து தாக்கப்பட்டனர். சுவரொட்டிகள் பிளக்ஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மாடம் தொகுதியில், வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை பிரச்சாரம் செய்யக்கூட அனுமதிக்கவில்லை.
மார்க்சிஸ்டுகள் இவ்வளவு தூரம் ஆதிக்க வெறியுடன் நடந்துகொண்டபோதிலும் பினராயி விஜயனின் நெருங்கிய உறவினர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் பாஜகவிலும் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர். இதை மார்க்சிஸ்டுகளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
இந்தப் பின்னணி தான் பாஜக ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. 23 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. பாஜக ஊழியர்கள் 15 மோட்டர் சைக்கிள்கள் நொறுக்கப்பட்டன. ரோமம் உள்ளிட்ட கழிவுகளைக் கொண்டுவந்து கிணறுகளில் போட்டுவிட்டனர். குடிக்க தண்ணீர் இன்றி பாஜகவினர் அவதிப்படுகின்றனர். கிணறுகளையெல்லாம் தூய்மைப்படுத்தினால் தான் அங்குள்ள தண்ணீரை பயன்படுத்த முடியும்.
தலைச்சேரி தொகுதியில் உள்ள கோடக்களம் வாக்குச்சாவடியில், பாஜக ஏஜெண்டாக இருந்த ரமேஷ் போலி வாக்காளர் ஒருவரை அடையாளம் கண்டுபிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்டுகள் அவரை மிகக் கடுமையாகத் தாக்கினார்கள். மட்டம்மா என்ற இடத்தில் பால் கூட்டுறவு சங்கம் தாக்கப்பட்டது.
ஸ்ரீ நாராயணகுரு ஜெயந்தி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. கோலிக்கடவு என்ற இடத்தில் பல ஸ்வயம்சேவகர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். கோலசேரி என்ற இடத்தில், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதைப் போல பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்டுகள் வன்முறையை அரங்கேற்றினர்.
காசர்கோடு மாவட்டத்தில், மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ குஞ்சுராமன் தலைமையிலான கும்பல், பாஜக நிர்வாகிகளை சரமாரியாகத் தாக்கியது. பாஜக வாக்குச்சாவடி ஏஜெண்டை இக்கும்பல் சுற்றி வளைத்தது. இனிமேல் பாஜகவுக்கு வேலை பார்க்கமாட்டேன் என்று எழுதித் தருமாறு கட்டாயப்படுத்தியது. சிமெண்ட் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட பல கதைகள் சேதப்படுத்தப்பட்டன. சிமெண்த் சாக்குகளின் மீது தண்ணீரை ஊற்றி முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டனர்.
சங்க பிரச்சாரக்காக முன்பு செயல்பட்ட முக்கியஸ்தரரின் சகோதர கோவிந்தனின் வீட்டை நிர்மூலமாக்கினர். பீர் பாட்டில்களைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். பாஜக ஊழியர் ஒருவரின் உறவினரான பெண்மணி ஒருவர் நடத்தி வந்த தையல் மையத்திலிருந்த இயந்திரங்களை எல்லாம் நாசப்படுத்தினர். கோழிக்கோடு மாவட்டத்தில் நடபுரத்தில் பாஜக ஊழியர் ஒருவரை அடித்து உதைத்ததில் அவரது கால் உடைந்து விட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஹரிபாடு தொகுதியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா வெற்றி பெற்றார். இத்தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்குச் சென்றுகொண்டிருந்த தலித் மாணவர்களை மார்க்சிஸ்டுகள் அடித்து உதைத்தார்கள். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 50 ஆண்டு காலத்தில் 267 ஸ்வயம்சேவகர்கள் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். இதில் மார்க்சிஸ்டுகளின் வன்முறைக்கு பலியான ஸ்வயம்சேவகர்களின் எண்ணிக்கை 232. மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ. பி. ஜெயராஜன் எங்களுக்கு உடன்படாதவர்களை ஒழித்துக்கட்டுவதுதான் எங்கள் வழிமுறை என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார். மார்க்சிஸ்டுகள் மாறவேயில்லை.