கடல்சார் துறைகளில் பெரும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு

மூன்றாவது உலகளாவிய கடல்சார் இந்தியா மாநாடு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் மூன்று நாட்கள் நடக்கிறது.

இதில், 70 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: சமீபத்தில் ‘ஜி – 20’ உச்சி மாநாடு புதுடில்லியில் நடந்தது. இந்த மாநாட்டின்போது, இந்தியா – மேற்காசியா – ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார பெருவழிப்பாதை திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தை மாற்றி அமைக்கும்.

இந்த திட்டத்தின்படி ரயில், கடல் வாயிலாக இந்தியா, மேற்காசியா மற்றும் ஐரோப்பா இணைக்கப்பட உள்ளன. இதையடுத்து, துறைமுகங்கள் மேம்படும். புதிய துறைமுகங்கள், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆகியவை ஏற்படும். இந்த திட்டத்தால், கடல்சார் துறையில் புதிய வாய்ப்பு கள் ஏற்படும். இதை முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த மாநாட்டையொட்டி, ‘அமிர்த கால இலக்குகள்’ என்ற பெயரில், கடல்சார் நீல பொருளாதாரத்துக்கான நீண்டகால தொலைநோக்கு திட்டத்துக்கான வரைவை பிரதமர் மோடி வெளியிட்டார். துறைமுக வசதிகளை மேம்படுத்துவது, நீடித்த நிலையான நடைமுறைகளை உருவாக்குதல், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கியது இந்த வரைவு.

இதன் ஒரு பகுதியாக, 23,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்சார் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும், 7.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அவர் அர்ப்பணித்தார்.