இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகளின் கூட்டு பயிற்சி சென்னை அருகே கடற்பரப்பில் நடைபெற்றது. பல்வேறு விதமான மீட்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு வீரர்களும் ஒத்திகை, பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் இணைந்து மேற்கொள்ளும் 20-வது கூட்டு பயிற்சி சென்னையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தொலைவில் வங்கக்கடலில் நேற்று நடந்தது.
சரக்கு கப்பலில் தீப்பிடித்தால் கடலோர காவல் படை கப்பல்களில் விரைந்து சென்று தீயை அணைப்பது, அந்தகப்பலில் இருக்கும் ஊழியர்களை மீட்பது, விமானம், ஹெலிகாப்டரில் சென்று மிதவை ஜாக்கெட்களை வீசி, கடலில் தத்தளிக்கும் தொழிலாளர்களை காப்பாற்றுவது, இரவுநேரத்தில் ஒளியை பாய்ச்சி விமானம், ஹெலிகாப்டர்களிடம் உதவி கோருவது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் பிரத்யேக மாசு கட்டுப்பாட்டு படகுகள் மூலம் மிதவை பூம்களை கடலில் போட்டு, எண்ணெய் கசிவு மேலும் பரவாமல் தடுத்து, அகற்றும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது. புதிய நடைமுறையாக, ரிமோட்கன்ட்ரோலில் இயங்கக்கூடிய மிதவைகளை கடலில் தத்தளிப்பவர்களுக்கு அருகே அனுப்பி, நீச்சல் அடிக்காமலேயே அவர்களை மீட்டு அழைத்து வரும் ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், இப்பயிற்சி குறித்து செய்தியாளர்களிடம் இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. டோனி மைக்கேல் கூறியதாவது: ஜப்பான் கடலோர காவல் படையிடம் 550 கப்பல்கள், 150 விமானங்கள், ஹெலிகாப்டர்களும், இந்தியாவிடம் 70 கப்பல்கள், 75 விமானங்கள், ஹெலிகாப்டர்களும் உள்ளன. கடலோர காவல் படையை இந்தியாதொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
தொடக்கத்தில், ஜப்பானிடம் இந்தியா நிறைய கற்றுக்கொண்டது. இப்போது, இந்தியாவிடம் ஜப்பான் அதிகம் கற்று வருகிறது. ஜப்பானின் கடலோர காவல் படையில் ஒரு வீரரே பல பணிகளை மேற்கொள்கிறார். இந்தியாவில் ஒவ்வொரு பணிக்கும் ஒருவர் இருக்கிறார். ஜப்பான்போல பல்திறன் கொண்ட வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தூத்துக்குடி பெருவெள்ளத்தின்போது, கடலோர காவல் படை மூலம் 8 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இரண்டரை நாட்களில் 758 பேர் மீட்கப்பட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலம் 5 நாட்களில் 7 டன் உணவுபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பான் கடலோர காவல் படைகமாண்டர் கோபயாஷி கூறும்போது, ‘‘இந்தியா உடனான கூட்டுபயிற்சிக்காக, எங்களது அதிநவீன கடலோர காவல் படை கப்பலான ‘யாஷிமா’வை கொண்டு வந்துள்ளோம். கூட்டு பயிற்சி மூலம், இருநாட்டு தொழில்நுட்பங்கள், வழிமுறைகளை பகிர்ந்துகொள்ள முடிகிறது’’ என்றார்.