கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸின் செயல் ஒற்றுமைக்கு எதிரானது

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சிக்கு மத்திய இணையமைச்சரும், நீலகிரிமக்களவைத் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவிடுத்த அறிக்கை: தமிழகத்தின் சிறப்புமிக்க ராமநாதபுரம் சீமை மறவர் நாட்டுசேதுபதி மன்னர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதி 1605-1972-ம் ஆண்டு வரையிலான அனைத்துபதிவேடுகளிலும் அப்பகுதி இந்தியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்துள்ளது. நாடு விடுதலை அடைந்து 1948-ல் ராயத்வாரி முறைஒழிக்கப்பட்ட பிறகு பதிப்பிக்கப்பட்ட நில ஆவணங்களின் படிமெட்ராஸ் மாகாணம் சர்வே எண்.1250-ல் கச்சத் தீவு இடம்பெற்றுள்ளது.

இப்படி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு பாத்தியப்பட்ட கச்சத் தீவை தான் காங்கிரஸ்அரசு இலங்கைக்கு வாரிக் கொடுத்தது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி ஓர் மாநிலத்தை மாற்றி அமைக்க கூட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி சட்டம் இயற்ற வேண்டும். ஆனால் இதை எதையும் மதிக்காமல் தமிழகத்தின் மாநில அரசிடம் கூட கலந்து பேசாமல் 1974 மற்றும் 1976-ம்ஆண்டு ஒப்பந்தங்கள் படி கச்சத்தீவு மீதான இந்தியாவின் உரிமையை தன்னிச்சையாக இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் கட்சி. தமிழகத்தை அப்போது ஆண்டு கொண்டிருந்த திமுக அரசு இதனை வெறும் பேச்சளவில் கண்டித்து தன் பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்டது.

1974-ல் நாடாளுமன்றத்தில் பாஜவின் முக்கிய தலைவர் வாஜ்பாய், கச்சத் தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு இந்தியாவுக்கு துரோகம் இழைத்துள்ளதை தகுந்தஆதாரத்தை சுட்டி காட்டி பேசியுள்ளார். ராமாயண காவியத்தின் படி ராமரும் வாலியும் மல்யுத்தம் செய்த இடம் கச்சத் தீவு என்றும் அதனால் ஒரு காலத்தில் வாலித் தீவு என அழைக்கப்பட்டதையும் வாஜ்பாய் உரையில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எக்காலமும் இந்தியாவின் உரிமை மற்றும் தமிழர்களின் நலன் மீது பாஜக அக்கறையுடன் இருக்கும் என்பதற்கு மேற்கண்ட உரை ஒரு உன்னத சாட்சி. எனவேஇத்தகைய பெருமைமிகு தீவைதமிழர்களின் பூர்வீக பூமியைதனது அரசியல் ஆதாயத்துக்காக இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸ் அரசு இந்திய இறையாண் மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான தீய சக்தியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் மாதப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கைபிரதமராக இருந்த டட்லி சேனநாயகவும் ரகசிய ஒப்பந்தம் போட்டனர். 1974 ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. எதற்காக கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை பெற்றுள்ளோம். முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சினையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி தற்போது வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) இரண்டாம் பகுதி வெளியாகும்போது, கருணாநிதி கச்சத்தீவுக்கு செய்த துரோகம் குறித்து பேசுவோம். கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.