இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்கு அழைத்து சென்று, மீண்டும் பூமிக்கு அழைத்து வர, விண்கலத்தில் இடம் பெறும், ‘இன்டகிரேடட் ஏர் டிராப் டெஸ்ட் க்ரூ மாடல்’ எனப்படும் கட்டமைப்பின் மாதிரியை, சென்னையை சேர்ந்த கே.சி.பி., நிறுவனம் தயாரித்துள்ளது. அதை, அந்நிறுவனம் இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் வழங்குகிறது.
இதுகுறித்து, கே.சி.பி., குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இந்திரா தத் கூறியதாவது: ககன்யான் விண்கலத்தில் முக்கிய அங்கமாகிய மனிதர்கள் பாதுகாப்பாக இருக்கும், ‘ஏர் டிராப் க்ரூ மாடல்’ கட்டமைப்பின் இரு மாதிரிகளை தயாரித்து வழங்கும் பணியை கே.சி.பி., நிறுவனத்திற்கு இஸ்ரோ வழங்கியது.
விண்வெளியில் இருந்து வீரர்கள், இந்த கட்டமைப்பு உதவியுடன் பாதுகாப்பாக கடலில் தரை இறங்குவர். அந்த கட்டமைப்பின் மாதிரி, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உயர்தர உலோகங்களால், 3.10 டன் எடையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இது, 2.60 மீட்டர் உயரமும், 3.1 மீட்டர் விட்டமும் உடையது. இது, பாதுகாப்பு மற்றும் உறுதியானதாகவும், வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் தன்மை உடையதாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு கட்டமைப்பை உருவாக்க, 1.60 கோடி ரூபாய் செலவானது. ஒரு கட்டமைப்பு, இன்று சென்னை திருவொற்றியூரில் உள்ள கே.சி.பி., ஆலையில் இருந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் வழங்கப்படும். மற்றொன்று அடுத்த ஆண்டு மார்ச்சில் வழங்கப்படும். அந்த கட்டமைப்பை பயன்படுத்தி, இஸ்ரோ பல்வேறுகட்ட சோதனைகளை மேற்கொள்ளும்.