ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை

”கோவையில் ஒரு வாக்காளருக்காவது, பா.ஜ., சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகத் தயார்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கரூர் லோக்சபா தொகுதி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், ஊத்துப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தன் பெற்றோருடன் வந்து ஓட்டு செலுத்தினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

என் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், ஊத்துப்பட்டி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்து உள்ளேன். தேர்தலை நேர்மையாக சந்தித்து இருக்கிறோம். கோவையில் ஒரு வாக்காளருக்காவது, பா.ஜ., சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகத் தயார்.

ஒரு அறம் சார்ந்த வேள்வியாக இந்த தேர்தலை, பா.ஜ., எதிர்கொள்கிறது. கோவையில் தி.மு.க., – அ.தி.மு.க., 1,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. பணத்தை வைத்து கோவை மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைப்ப வர்களுக்கு, கோவை மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.

இவ்வாறு அவர் கூறினார். மத்தியில் காங்., ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என, -கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ”அதில், அவர் சொன்னதில் நிறைய கோபம் இருக்கிறது, அதை பற்றி தற்போது பேசினால் தேர்தல் விதிமுறை மீறலாகி விடும்,” என, அண்ணாமலை கூறினார். இந்த தேர்தலில், பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவர் என முதல்வர் ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு, ”நல்ல பாடம் என்றால் முதல்வர் சொன்னபடி பா.ஜ., 39 இடங்களில் வெற்றி பெறும்,” என்றார்.