ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டேயிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல், சட்ட மன்றத் தேர்தல், ஊராட்சி மன்ற தேர்தல் என எப்போது பார்த்தாலும் தேர்தல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இது அரசுக்கு வீண் செலவு. 1952 முதல் 1967 வரை நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடைபெற்றன. சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்தாலோ கவிழ்க்கப்பட்டாலோ இடைத் தேர்தல் தவிர்க்க இயலாததாகி விட்டது. இதை மாற்றி அமைக்க முடியுமா? சமீப காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே தேர்தலாக நடத்தினால் நல்லது என்ற கருத்தைத் தெரிவித்து வருகிறார். இதே கருத்தை அமரர் பொள்ளாச்சி மகாலிங்கம் அடிக்கடி தெரிவித்து வந்தார்.
நாடு முழுவதும் மத்திய ஆட்சிக்கான லோக்சபா தேர்தல் தனியாகவும் மாநில ஆட்சிக்கான சட்டமன்றத் தேர்தல்கள் தனியாகவும் நடைபெறத் தொடங்கிவிட்டன. இதனால் நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் எங்காவது ஒரு சில மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இதுவல்லாமல் இடைத்தேர்தல்களும் நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களும் மாநிலங்களில் நடக்கின்றன.
தேர்தல்கள் இப்படிப் பலவாறாக நடைபெறுவதால் ஆட்சியில் இடம்பெற்றுள்ள ஆளும் கட்சி, உறுதியாக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாமல், ஒரு விதமான அச்சத்தோடுதான் ஆள வேண்டியதாகிறது.
இவற்றை எல்லாம் மனதில் கொண்டு 2003 ஆகஸ்ட் 2 அன்று மும்பையில் பேசிய துணைப்பிரதமர் எல்.கே. அத்வானி, லோக்சபா தேர்தலையும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தினை வரவேற்றும், எதிர்த்தும் அபிப்பிராயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், இக்கருத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், தேர்தல் மூலம் கட்சி – ஆட்சியை மத்தியிலும், மாநிலங்களிலும் உருவாக்கத் திட்டமிட்டபோது, ஒரே சமயத்தில்தான் மத்திய ஆட்சிக்கும், மாநில ஆட்சிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறும் என அரசியல் சாஸனமே எதிர்பார்த்தது.
நமது நாட்டில் 29 மாநிலங்கள் உள்ளன. இந்த 29 மாநிலங்களில் 2003 மார்ச் மாதம்தான் 4 மாநிலத் தேர்தல்கள் முடிந்தன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் 5 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
2004ல் லோக்சபா தேர்தல். அதனுடன் மேலும் 5 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மீதியுள்ள 24 சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் இல்லை. அவை 5 ஆண்டுக் காலத்தைப் பூர்த்தி செய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.
இவ்வாறு, தாறுமாறாக நமது தேர்தல்கள் நடைபெறுவதால், மத்தியில் ஆட்சி செயும் கட்சியின் செல்வாக்கு மங்கவும் செகிறது. பிரகாசமடையவும் செகிறது.
மாநிலத் தேர்தல்களில் மத்தியில் உள்ள ஆளுங்கட்சி, மாநில ஆட்சியை இழக்குமானால் அல்லது இழுபறி நிலைக்குத் தள்ளப்படுமானால், மத்திய ஆட்சியிலும் அதன் செல்வாக்கு மங்குகிறது. மத்திய ஆட்சியை விட்டு விலகுமாறு பிரதமரை எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. மாநிலத் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்று விட்டால், மத்தியில் உள்ள ஆளும் கட்சியின் பலம் அதிகரிக்கிறது.
தேர்தலைப் பற்றிய நினைப்பில் சதாகாலமும் உள்ள ஆளும் கட்சி, ஒரு நல்ல நிர்வாகத்தை நாட்டுக்குத் தர முடியாமல் தவிக்க நேர்கிறது” என்று துணைப்பிரதமர் எல்.கே. அத்வானி தமது மனதுக்குள் இருந்து வந்த கவலையை மும்பையில் ஒருமுறை வெளிப்படுத்தி விட்டார்.
ஒரே சமயத்தில் மக்களவை (லோக் சபா), சட்டசபைத் தேர்தல்களை நடத்தி விடுவதை வரவேற்கும்போது, இன்னொரு யோசனையையும் அனைத்து அரசியல் கட்சிகளும் பரிசீலிக்கலாம்.
நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் என்றால், ஒரு வாக்காளருக்கு இரண்டு ஓட்டுகள் தரப்படுகின்றன. அதே வாக்குச்சாவடியில் நகராட்சிக்கும், பஞ்சாயத்துக்கும் என மேலும் இரண்டு ஓட்டுக்களை வாக்காளர்களுக்குத் தருவதில் என்ன சிரமம் இருக்க முடியும்? இன்னொரு வகையில் இதுவும் ஒரு சிக்கன நடவடிக்கையாகத்தானே அமையும்!
நகர வாக்குச்சாவடிகளில் நகராட்சித் தலைவரையும் மாநகர வாக்குச் சாவடியில் மேயரையும் தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டினைத் தரலாம். இன்னொரு ஓட்டு, தமது வார்டு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வழங்கலாம். இவ்வாறு ஒவ்வொரு வாக்காளருக்கும் மேலும் இரண்டு ஓட்டுக்களை வழங்குவதில் ஒரு சிரமமும் இருக்க முடியாது.
அதேபோல, கிராம வாக்குச்சாவடிகளில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டும், பஞ்சாயத்து யூனியன் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒன்றுமாக, ஒவ்வொரு வாக்காளருக்கும் மேலும் இரண்டு ஓட்டுக்களைத் தந்து விடலாமே! தேர்தல் முடிந்த பிறகு, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகமே தனியாக அத்தேர்தலை நடத்திக் கொள்ள விட்டுவிடலாம்.
இப்போதுள்ள மாவட்ட பஞ்சாயத்து என்ற மூன்றாம் அடுக்கு முறையையும் நீக்கி விடலாம். முன்பிருந்த கிராமப் பஞ்சாயத்து மற்றும் யூனியன் என்ற இரண்டு அடுக்கு முறையே கிராம அபிவிருத்திக்குப் போதும்.
தேர்தல்களை ஒன்றாக நடத்தினால், அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் பணிகளைச் செய ஊழியர்கள் நகரத்திலும், கிராமத்திலும் ஒரு சேரக் கிடைப்பார்கள். அதனால், அரசியல் கட்சிகளே உற்சாகமாக இதனை வரவேற்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மரணமடைந்தாலோ, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இடையில் கவிழ்ந்தாலோ – கலைக்கப்பட்டாலோ அதற்காகத் தேர்தல் நடத்தப்பட்டால், 5 ஆண்டுகளில் மீதியுள்ள காலத்திற்கு மட்டும்தான் அது செல்லும் எனச் செய வேண்டும். இப்போது போலப் புதிதாக 5 ஆண்டுகளுக்கு அனுமதிக்கக்கூடாது.
இதனைத் தேர்தல் ஆணையம்தான் பரிசீலிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இதனை ஏற்க மறுத்தால், இதனை அமல்படுத்த முடியாது. ஏனெனில், தேர்தல் ஆணையம் நமது நீதிமன்றம் போல அரசமைப்புச் சட்டப்படி சுய அதிகாரம் படைத்த நிறுவனம்.
2003, ‘ஓம் சக்தி’ தீபாவளி மலரிலிருந்து
(நன்றி: ஓம்சக்தி ஆசிரியர் திரு. சிதம்பரநாதன்)
**********************************************************************************************************************************************
தேர்தல் கமிஷனர்: 2018 செப்டம்பருக்குப் பிறகு நடத்துவது சாத்தியமே”
ஒரே நேரத்தில் லோக்சபா-சட்டமன்றங்கள் தேர்தலை 2018 செப்டம்பருக்குப் பிறகு நடத்தது தயார் என்று தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அக்டோபர் 4 அன்று அறிவித்தார். எங்களிடம் உள்ளவை, எங்களுக்குத் தேவையானவை குறித்து அரசிடம் தெரிவித்திருக்கிறோம்” என்றார் அவர். தேர்தல் மின்னணு சாதனங்கள் 40 லட்சம் தேவைப்படும். அவை 2018 செப்டம்பருக்குள் கிடைத்து விடும். எனவே அதன் பிறகு தேர்தல் நடத்த முடியும் என்று தெரிகிறது.
**********************************************************************************************************************************************