‘ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அமித்ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 1960ம் ஆண்டில் இருந்தே, தேர்தலில் வெற்றி பெற, திருப்திபடுத்தும் அரசியலை காங்கிரஸ் ஆயுதமாக்கியது. இதற்கு எதிராக பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். 2014ல் இருந்து, பிரதமர் மோடி, வளர்ச்சி திட்டத்தை வகுத்தார். குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் குறை கூறி வருகின்றனர். அவர்கள் தங்கள் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை வலுப்படுத்த விரும்புகிறார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டு, வெற்றி பெற எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நாட்டின் நீதித்துறையை உலகிலேயே மிகவும் நவீனமானதாக மாற்றும். ஊழல் வழக்குகளுக்கு முடிவு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. நீதி நிலுவையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் பா.ஜ., மற்றும் நரேந்திர மோடியின் கொள்கைகள் தெளிவானவை. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வராது. காங்கிரஸ் பலமுறை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மக்களை திருப்திபடுத்தும் அரசியலை விட்டு விடுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார்.