எப்ஐஆர்-களை ரத்து செய்யக்கோரும் 1250 வழக்குகளை நேற்று ஒரேநாளில் நீதிபதி விசாரணைக்கு எடுத்ததற்கு வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போலீஸார் பதிவு செய்துள்ள எப்ஐஆர்-களை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுவது வழக்கம். இதுபோல தொடரப்பட்டிருந்த 1250 வழக்குகளை தனி நீதிபதியான ஜி.ஜெயச்சந்திரன் நேற்று விசாரணைக்கு எடுத்திருந்தார். இதற்கு முன்பாக இத்தனை வழக்குகளை எந்த நீதிபதியும் ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்குகளை ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்ததற்கு ஆட்சேபம் தெரிவித்த வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால் கனகராஜ், கே.பாலு உள்ளிட்டோர், ஒரேநாளில் இந்த அனைத்து வழக்குகளையும் மொத்தமாக விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்கக்கூடாது என்றும், ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதால் தனித்தனியாக விசாரி்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து நீதிபதி, உச்ச நீதிமன்றம் நிஹாரிகா என்ற வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில் போலீஸார் பதிவு செய்யும் எப்ஐஆர்-களை ரத்து செய்வது தொடர்பாக நீண்ட விளக்கம் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக எப்ஐஆர்-களை ரத்து செய்யக்கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை நிலுவையில் இருந்து வருகின்றன. உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் இந்த மனுக்களை எப்படி விசாரணைக்கு ஏற்றது எனத் தெரியவில்லை. எனவே இந்த 1250 வழக்குகளையும் தள்ளுபடி செய்யப்போகிறேன் என்றார். அதற்கு மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அதையடுத்து நீதிபதி, இந்த 1250 வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் தனித்தனியாக வகைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.18-க்கு தள்ளி வைத்துள்ளார்.