நமது நாட்டின் பாரம்பரியம் மிகப் பழமையானது, செறிவுள்ளது என நான் அறிவுபூர்வமாக அறிந்ததை இன்று கண்கூடாக உணர்ந்தேன். ஆம் மகாகும்பமேளா பற்றித் தான் கூறுகிறேன். நாடு முழுவதும் மேலோட்டமான பல வேற்றுமைகளைத் தகர்த்து இந்த மண்ணின் மைந்தர்கள் அனைவரும் ஒரே சிந்தனை கொண்டவர்கள் என்பதை நம் முன்னோர்கள் பல விதமாக உணரச் செய்தனர். அதில் அற்புதமான ஒரு நிகழ்வு தான் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் என்ற புண்யநகரில் நடைபெறும் மகா கும்பமேளா ஆகும்.
இது இவ்வாண்டு தை மாதம் முதல் நாள் பொங்கல் தினம் அன்று துவங்கி சிவராத்திரி வரை மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தர்மம், பண்பாடு, வாழ்க்கைமுறை இவற்றை பிரதிபலிக்கும் இந்த மேளா ஜாதி, மொழி, மாநிலம், ஏழை- பணக்காரன், நகரம் -கிராமம், படித்தவர்- படிக்காதவர், உயர்ந்தவர்- தாழ்ந்தவர், மேட்டுக்குடி- பாமர மக்கள் போன்ற எல்லா வேற்றுமைகளையும் கடந்து கோடிக்கணக்கான மக்கள் பக்தி சிரத்தையுடன் ஒன்று கூடி சங்கமத்தில் நீராடுகின்றனர்.
பெரும் வியப்பு என்னவென்றால் இத்தனை லட்சம், கோடி மக்கள் கூடும் இடத்தில் எந்தவித அசம்பாவிதமோ பண்பாடு சாராத அசிங்கங்களோ நடக்காமல் (விதிவிலக்கு அமாவாசை அன்று நடந்த உயிரிழப்புகள்) ஆங்காங்கு ஸ்ரீராம கதையும் அன்னதானமும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
நாட்டிலுள்ள பல விதமான வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்கள் – பஞ்சாப், இமாச்சல், வடகிழக்கு மாநிலங்கள், தென் மாநிலங்கள் என அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மடங்களும் கொட்டகை அமைத்து மக்கள் தங்கவும், நற்சிந்தனைகளைக் கேட்கவும், பார்க்கவும், உணவருந்தவும் மிகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநில அரசு மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பலகைகள் போட்டு அவற்றின் மீது அவ்வப்போது தண்ணீர் ஊற்றி தூசி கிளம்பாமல் இருக்கவும், வாகன போக்குவரத்து, தூய்மைப் பணி, சுகாதாரம், குடிநீர், ரயில் போக்குவரத்து, பாதுகாப்பு எனப் பலவற்றையும் கண் போல பார்த்துப் பார்த்து செய்துள்ளனர். அவர்களை அனைவரும் பாராட்ட வேண்டும்.
இதுவரை சுமார் 50 கோடி மக்கள் நீராடியுள்ளனர் என்கிறார்கள். இது நம் பாரத நாட்டில் மட்டுமே நிகழும் அதிசயமாகும்.
இதனால் கொரோனா பரவும், நோய் நொடி பெருகும், சுற்றுச்சூழல் பாதிக்கும், மூட நம்பிக்கை வளரும் என சனாதன தர்மத்தின் எதிரிகள் எவ்வளவு கதறினாலும் எடுபடாது. பாரத் மாதா கி ஜெய்! சனாதன தர்ம கி ஜெய்!! பிரயாக்ராஜிலிருந்து உ. சுந்தர்