இன்று நாட்டில் தன்னை அபலை என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் இவரை அறிந்து கொள்வது அவசியம். பெயர் சம்யுக்தா பராசர் ஐபிஎஸ். காவல்துறை கண்காணிப்பாளராக ஏகே 47 துப்பாக்கி ஏந்தி, பயங்கரவாதிகளின் பாசறையான அஸ்ஸாமின் அடர்ந்த காட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார். அங்கே 16 பயங்கரவாதிகளை எமனுலகு அனுப்பி, இன்னும் 64 பயங்கரவாதிகளை மடக்கிப் பிடித்த இவர் வயது 46. ஒரு ஆண் குழந்தைக்கு தாய். மிகவும் அழகான பெண்மணி. போர் முனையில் இவர் காட்டும் அதிரடியை கற்பனை செய்வது கடினம்.
அஸ்ஸாமில் படித்த சம்யுக்தா, ஜே.என்.யூவில் பட்டம் பெற்றார், ஐபிஎஸ்ஸில் 85வது இடத்தைப் பிடித்தார், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முனைவர் பட்டம் பெற்றார். ஐஏஎஸ் அதிகாரியான புரு குப்தாவை மணந்தார். மகனுக்கு 6 வயது ஆகிறது. 2014 ஆம் ஆண்டு அஸ்ஸாமின் போடோ மக்கள் அதிகம் வசிக்கும் சோனித்பூர் மாவட்டத்தில், மாவட்டம் முழுவதும் பெரும் குழப்பம் நிலவியபோது, சம்யுக்தா அங்கு நியமிக்கப்பட்டார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு வந்தனர். இவர் வழி நடத்தும் ஆண் காவலர்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்கி, ஏற்ற பணியை திறம்பட வெற்றிகரமாக நிறைவேற்றினார். தேசத்திலிருந்து மாவோயிஸ்டுகளை ஒழிக்க தேதி குறித்து செயல்பட்டு வரும் பாரத உள்துறைக்கு இவர் போன்றவர்கள் அரிய பொக்கிஷம். தொடர்ச்சியான கொலை மிரட்டல்களுக்குப் பழக்கப்பட்ட இவர், 30 மாத பதவிக்காலத்தில் அந்த வட்டாரத்தில் பயங்கரவாதிகளை துடைத்தழித்து சாதனை புரிந்து, நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை சகிதம் உலவுகிறார். தற்போது டெல்லியில் உள்ள அவரது குறிக்கோள், நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதாகும். இந்த நவீன ஜான்சி ராணிக்கு துர்க்கை அம்மன் அருள் நிச்சயம்.