ஒரு நிகழ்வின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அக்டோபர் 9ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரையிலான காலத்தில் 8 பயங்கரவாத சதிகள் முறியடிக்கப் பட்டுள்ளன.
நவம்பர் 10ம் தேதி மாலை டெல்லி செங்கோட்டை அருகே வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். இந்த ஒரு நிகழ்வின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அக்டோபர் 9ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரையிலான காலத்தில் 8 பயங்கரவாத சதிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய விவரங்களைப் பார்ப்போம்…
அக்டோபர் 9: பஞ்சாப் பயங்கரவாத தடுப்பு பாபர் கெல்சா இண்டர்நேசனல் அமைப்பைச் சேர்ந்த இருவரை ஜலந்தரில் கைது செய்தனர். 2.5 கிலோ ஆர்டிஎக்ஸ் பொருத்தப்பட்ட ஐ.இ.டியும் கைப்பற்றப்பட்டது. இங்கிலாந்தில் இருந்தபடி மிஷன் ஜவுரியன், அடேஸ் ஜமாரே ஆகியோர் இதற்கு பின்புலமாக செயல்பட்டுள்ளனர். பாபர் கல்சா இண்டர்நேசனலின் மாஸ்டர் மைண்ட் ஹர்பிந்தர் சிங் ரிண்டா, இதை வழிநடத்தி வந்துள்ளார். பஞ்சாபிலும் மற்ற இடங்களிலும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற மேற்கொள்ளப்பட்ட சதி முறியடிக்கப்பட்டு விட்டது.
அக்டோபர் 15: அமிர்தசரஸில் பயங்கரவாதம், போதைப்பொருள் தொடர்பாக பஞ்சாப் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். ராஜா (அமிர்தசரஸ்), சுரேந்தர் (பசில்கா), ஜெக்ஜித் (தரங்தரங்) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். 10 பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டன. 500 கிராம் அபினும் கைப்பற்றப்பட்டது. ஆயுதங்களும், போதைப் பொருளும் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலமாக போடப்பட்டுள்ளன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அக்டோபர் 24: டெல்லி போலீசார் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். இருவரின் பெயரும் அட்னன் என்பதாகும். இவர்கள் தற்கொலைப்படை தாக்குதலில் வல்லவர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், டெல்லி சாதிக் நகரிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அக்டோபர் 29: மகாராஷ்ட்ரா பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் மென்பொறியாளர் சுபேர் ஹங்கர்கேகர் என்பவரை கைது செய்தனர். அல்கொய்தாவுடன் சுபேர் ஹங்கர்கேகருக்கு தொடர்பு உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.கே. 47 துப்பாக்கியை கையாள்வதிலும், வெடிகுண்டுகளை தயாரிப்பதிலும் இவர் வல்லவர். அதுமட்டுமல்லாமல் ஒசாமா பின்லேடனின் பேச்சுகள் அடங்கிய உருது பதிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஜிகாதிகள் ஆக்குவதுதான், இந்த நபரின் வேலையாக இருந்துள்ளது.
அக்டோபர் 30: ஆந்திரா போலீசார் உ.பி சத்தியசாயி மாவட்டம், மஹாராஷ்ட்ரா ஆகியவற்றைச் சேர்ந்த இரு நபர்களை கைது செய்தனர். பாகிஸ்தானை மையப்படுத்தி இயங்கி வரும் ஜெய்ஸ் − -இ − -முகம்மது அமைப்புடன் இருவருக்கும் நெருக்கமான தொடர்புள்ளது. இவர்கள் ஜிகாதி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். தங்கள் அமைப்புக்கு ஆட்களையும் சேர்ந்துள்ளனர். முன்னதாக கர்மாவரத்தைச் சேர்ந்த கோட்வால் நூர்முகமது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெய்ஸ்- − இ − -முகம்மதின் எடுபிடிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 7: ராஜஸ்தானின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் ஓசாமா உமர் என்பவரை ஜலோர் என்ற இடத்தில் கைது செய்தனர். இந்த நபர் மெளல்வி ஆவார். இவருக்கு தகரித் – இ – தலிபான் – பாகிஸ்தான் என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் இவர் தொடர்பு வைத்துள்ளார். குஜராத்திலும், ராஜஸ்தானிலும் இளைஞர்களை மூளைச் சலவைச் செய்து ஜிகாதிகளாக்க முற்பட்டுள்ளார். குறைந்தபட்சம் 4 நபர்களையாவது இவர் தகரித் – இ – தலிபான் – பாகிஸ்தானில் சேர்த்துள்ளதாக புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
நவம்பர் 9: அகமதாபாத்தில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் 3 ஐ.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை கைது செய்தனர். ஒரே நேரத்தில் பாரதத்தில் உள்ள பல்வேறு நகரங்களிலும், நாச வேலைகளை அரங்கேற்ற சதித்திட்டம் வகுத்திருந்தது அம்பலமாகியுள்ளது. காவல்துறையினர் சுமார் ஓராண்டு காலம் உன்னிப்பாக கண்காணித்த பிறகே, கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நபர்களுக்கு வட பாரதத்துடன் மட்டுமல்லாமல், தென்பாரதத்துடனும் தொடர்பு உள்ளது. வடமாநிலங்களில் மட்டுமல்லாமல், தென் மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் ரத்தக் களரியை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பது புலனாய்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நவம்பர் 10: ஹரியானா போலீசாரும், காஷ்மீர் போலீசாரும் பரிதாபாத்தில் 2,900 கிலோ கிராம் ஐ.இ.டி. தயாரிப்புக்கான பாகங்களை கைப்பற்றினர். 360 கிலோ அமோனியம் நைட்ரேட்டும் கைப்பற்றப்பட்டது. அல்பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் முசாமில் அகமது, அடில் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 வார கண்காணிப்புக்குப் பிறகே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையெல்லாம் தடுக்க தவறியிருந்தால், நவம்பர் 10ம் தேதி ஏற்பட்ட அசம்பாவிதம், இப்போது நடைபெற்றதை விட, பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி