ஹிந்து யார் என்பதை விளக்கும்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் ‘எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் வித்தியாசம் இல்லாமல் வாழ்கிற எண்ணம் கொண்டவர் ஹிந்து’ என்ற ஒரு வாக்கியம் சொன்னார் (அக்டோபர் 8 நாகபுரி விஜயதசமி விழா பேருரையில்). அத்தகைய ஹிந்துக்களை ஒருங்கிணைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் பணி என்பதால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நல்லிணக்கம் நிலவுமாறு பார்த்துக் கொள்வது
ஆர்.எஸ்.எஸ்ஸின் சுபாவம். ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்தத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டி ஒரு தமிழ்ப் பத்திரிகை அண்மையில் ஒருபக்கச் செய்தியொன்று வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக தமிழகத்தின் நகர்ப்புற நக்ஸல்களாலும் பிரிவினைவாத ஊடக முதலைகளாலும் வேட்டையாடப்பட்டு வந்த இதழியலாளர் சுந்தரராமன் குழுவினருடன் நடத்தும் ‘தமிழக அரசியல்’ என்ற (19.10.2019 தேதியிட்ட) பத்திரிகைதான் அது. திருநெல்வேலியில் நடந்த
ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழா பற்றி செய்தி வெளியிடுகையில்தான் அந்த பத்திரிகை இவ்வாறு எழுதியது: ‘‘மிக அமைதியான முறையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பொதுமக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை விதைத்திருப்பது வரவேற்கத்தக்கது’’.
இதுபோல ஆர்.எஸ்.எஸ்ஸை சரிவரப் புரிந்து கொண்டு செய்தி வெளியான வேறு சம்பவம் உண்டா என்று சங்கத்தின் அகில பாரதப் பொறுப்பாளர் ஒருவரைக் கேட்டபோது அவர் ‘ஆர்.எஸ்.எஸ் ஆற்றும் அரும்பணிகள்’ நூலை மேற்கோள் காட்டி ஒரு சம்பவம் சொன்னார். ‘‘1977ல் ஆந்திராவில் கடற்கரையோர திவி தாலுகாவை புயல் நிர்மூலமாக்கியபோது முதல் ஆளாக ஸ்வயம்சேவகர்கள் அங்கே சென்று நிவாரணப் பணி தொடங்கினார்கள். தன் குடும்பத்தில் ஏழெட்டுப்பேரை புயலுக்கு காவு கொடுத்து வெறித்த பார்வையுடன் அலைந்து கொண்டிருந்த உள்ளூர் மக்களை, முதல் வேலையாக, உயிரோடு இருக்கச் செய்வதற்காக ஸ்வயம்சேவகர்கள் மாலை வேளையில் புர்ர கதா போன்ற விறுவிறுப்பான, அதிரடியான கிராமிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி அதில் மனம் செலுத்தச் செய்தார்கள். அப்புறம்தான் உண்ண உணவு, உடுக்க உடை, பிழைக்கத் தொழில், இருக்க வீடு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்யத் தொடங்கினார்கள். அப்போது விஜயவாடாவில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ரெஸிடென்ட் எடிட்டராக இருந்த ஏ.என். தர் என்ற மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த உத்தி பற்றி பின்வருமாறு கருத்துத் தெரிவித்து கட்டுரை எழுதினார்: ‘‘மிக பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ள மக்களுக்கு தொண்டு செய்வது எப்படி என்பதை ஆர்.எஸ்.எஸ்ஸிடம் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும்.’’ உண்மையில் அந்த ஊர் மக்களின் உடலுக்கும் மனதுக்கும் நல்லிணக்கம் ஏற்படுத்துவதே ஸ்வயம்சேவகர்களின் நோக்கமாக இருந்தது.
சென்னை தாம்பரத்தை ஒட்டிய ஒரு கிராமத்தில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. 1999 கார்கில் போரின்போது வீரமரணமடைந்த ஒரு ராணுவ வீரர் உடல் அங்கே அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த அந்த வீரனுக்கு வீரவணக்கம் செலுத்த ஏராள மானவர்கள் கூடிவிட்டார்கள். ராணுவத்தினர், ஊராட்சி நிர்வாகத்தினர், மாநில அரசு அதிகாரிகள் என பல பிரிவுகளைச் சேர்ந்த அன்பர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வீரவணக்க நிகழ்ச்சி அமைதிகரமாக நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பொறுப்பை ஏற்று திறம்பட நிறைவேற்றியது யார் தெரியுமா? அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள்தான்! ஆர்.எஸ்.எஸ் என்றால் அப்படித்தான்.