இட ஒதுக்கீடு குறித்த செதிகளும் போராட்டங்களும், அரசியல்வாதிகளின் அறிக்கைகளும் இடம் பெறாத பத்திரிகைகளோ, நாட்களோ இல்லை.
அந்தளவிற்கு தங்கள் சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கவேண்டும், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று இந்தியாவின் பலமுனைகளில் இருந்தும் தங்கள் போராட்ட குரல்களை ஒலிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடே வேண்டாம் என்று போராடியவர்கள். இன்று பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் வகுப்பில் இணைக்க வேண்டும் என்று போராடுகின்றனர். அவர்களில் சிலரை பட்டியல் இனத்தில் சேர்த்தால் கூட ஏற்றுக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.
50 விழுக்காடை தாண்டக்கூடாது என்ற நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் இருந்ததால் ஏற்கனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கிய 22.5 விழுக்காடு போக, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27.5 விழுக்காடு ஒதுக்கப்பட்டது. இதில் 25 வருடத்துக்கு பின்பு இடஒதுக்கீட்டை காலத்துக்கு ஏற்ப மறுபரிசீலனை செயலாம் என்ற கூற்றுக்கு இணங்க பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் காலத்துக்கு ஏற்ற மாற்றம் என்பது நிருபணமானது.
இந்நிலையில்தான், கடந்த சில வருடங்களாக குஜராத்தில் பட்டேலும் ஹரியானாவில் ஜாட்டும் தங்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கவும், ராஜஸ்தானில் தற்போது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிரிவில் இருக்கும் குஜ்ஜர்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் போராடி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கூட மீனவ சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
குஜராத்தின் பட்டேல் சமூகம் விவசாயத்தில் மட்டுமல்லாது, தொழில்துறையிலும் குறிப்பாக வைர வர்த்தகத்திலும் செல்வாக்குடன் இருக்கும் முன்னேறிய சமூகம். அதேநேரத்தில் அந்த சமூகத்தில் ஏழைகளே இல்லை என்று கூறிவிட முடியாது. ஜாட் சமூகமும் விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த சமூகம். ஆனால் இன்று விவசாயத் துறையில் பரவலாக காணப்படும் வீழ்ச்சி அச்சமூகத்திலும் பெரும்பாலானவர்களை வறுமைக்கு இட்டுச்சென்றுள்ளது. ஆக, மொத்தத்தில் ஏழைகளே இல்லாத உயர் சமூகம் என்று ஒன்றும் இல்லை.
எனவே காலத்துக்கு ஏற்ற மாற்றம் என்ற அம்பேத்கரின் கூற்றுக்கு இணங்க, பொருளாதாரத்தால் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிதம் இடஒதுக்கீடு வழங்கலாம்.
அதே நேரத்தில் ‘தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை இடஒதுக்கீடு. ‘அம்பேத்கரே மீண்டும் தோன்றி வந்தாலும் கூட அதை பறிக்க முடியாது’ என்கிற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கு இணங்க தலித் உள்ளிட்டவர்களின் தற்போதைய இட ஒதுக்கிட்டு முறையை தொடரவும் வேண்டும்.