இந்திய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (ஐ.ஐ.டி) சேர விரும்புவோரை இலக்காகக் கொண்டு www.askiitm.com என்ற இணையதளத்தை ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் தொடங்கி உள்ளனர். ஈதில், ஐ.ஐ.டியில் சேரவிரும்புவோர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், வேலைவாய்ப்புகள் தொடங்கி, வளாக வசதிகள் வரை இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை இணையதளத்தில் பதிவிடுவோருக்கு 48 மணி நேரத்திற்குள் இமெயில் அல்லது வாட்ஸ்அப் மூலம் முன்னாள் மாணவர்கள் பதில் அளிப்பார்கள். இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை எவரும் கேட்க இணையதளத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இணையதளத்தில் ஏற்கனவே இடம்பெற்று இருக்கும் கேள்விகளையோ அல்லது தாங்கள் விரும்பும் கேள்விகளையோ பதிவிடலாம். இந்த முன்முயற்சி குறித்துப் பேசிய பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொடர்பு), ஐ.ஐ.டி மெட்ராஸ் கூறுகையில், “எங்கள் முன்னாள் மாணவர்கள்தான் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கச் சிறந்தவர்கள். ஏனெனில் இக்கல்வி நிறுவனத்தில் படித்து, பட்டப் படிப்பு முடித்தபின் வேலைவாய்ப்பையும் நேரடியாகப் பெற்றவர்கள் அவர்கள்” என்றார்.