ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் தேசிய அளவிலான தேர்தல் முறைப்படி வாக்குப்பதிவை நடத்திக் கொள்ளலாம். ஆனால் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில்தான் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நாடுகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நாடுகளின் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சாரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2.5 ஆண்டுக்கு இப்பதவியில் மீண்டும் நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை நிறைவேற்ற முடியும். பெரும்பாலும் இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் சம்பந்தப்பட்ட பொதுவான அம்சங்கள் குறித்தே சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
ஆலோசனை அடிப்படையில் உறுப்பு நாடுகள் ஓர் ஆணையரை நியமித்துக் கொள்ளலாம். ஜனநாயக அம்சம்தான் பிரதானமாக உள்ளது. பொருளியல், அரசியல், சமூகவியல், மனித உரிமைகள் உள்ளிட்ட அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட்டுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது.
கடந்த நூற்றாண்டு 2 மகா யுத்தங்களை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு போர்கள் நடைபெற்றுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு இலக்கானது. அமைதியை நிலைநாட்ட வேண்டும். கருத்திணக்கத்தின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் போன்ற அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்பு, இடதுசாரிகளின் ஆதிக்கம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு இருந்து வந்தது. ஆனால், இப்போது வலதுசாரிகளின் ஆதரவு வலுக்கத் தொடங்கியுள்ளது. இதை ஒரு முக்கிய திருப்புமுனையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜெர்மனியில் இடதுசாரிகள் இறங்கு முகமாக உள்ளனர். வலதுசாரிகள் ஏறு முகமாக உள்ளனர். ஏ.எப்.டி (ஆல்டர்நெட்டிவ் பர் டியூஸ்லேண்ட்) என்ற வலதுசாரி கட்சி 2வது இடத்தைப் பிடித்துள்ளது. கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஏ.எப்.டி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும் குறிப்பாக புதிய நாசிஸ்டுகளுடன் ஏ.எப்.டி நிர்வாகிகள் ரகசிய தொடர்பு வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலும் இக்கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது. இது மாற்றத்திற்கான தொடக்கமாகவே கருதப்படுகிறது.
முன்பு கிழக்கு ஜெர்மனியாக இருந்த பகுதியில் இப்போது
ஏ.எப்.டி வலுவாக வேரூன்றி உள்ளது. மற்ற பிராந்தியங்களுக்கும் இதன் செல்வாக்கு வேகமாக பரவி வருகிறது. இடதுசாரிகள் மீதான அதிருப்தியும் அவநம்பிக்கையும்தான் வலதுசாரிகளின் வளர்பிறைக்கு மூலகாரணம் என்ற விமர்சனத்தை அரசியல் ஆய்வாளர்கள் பலர் முன்வைத்துள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டார். புதிய நாடாளுமன்றத்துக்கான முதல்கட்டத் தேர்தல் ஜூன் மாதம் 30ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஜூலை மாதம் 7ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆர்.என் என்ற வலதுசாரி கட்சி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 31.37 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ரினைசான்ஸ் கட்சிக்கு 14.60 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. இடதுசாரி கட்சியான எல்.எப்.ஐ 9.89 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. ஆர்.என் கட்சியின் தலைவராக 28 வயதே ஆன ஜோர்டான் பார்டெல்லா உள்ளார். கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து
ஆர்.என் கட்சி கணிசமான இடங்களை கைப்பற்றும் நிலை காணப்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது நனவானால் ஜோர்டான் பார்டெல்லா, பிரான்ஸ் பிரதமராவார். இளைய பிரதமர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைக்கும். சில சமரசங்களை செய்து கொண்டு இமானுவேல் மெக்ரான் பிரான்ஸ் அதிபராக தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான சுதந்திர கட்சியின் செல்வாக்கு ஏறுமுகமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் இக்கட்சி 25.4 சதவீத வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரிய மக்கள் கட்சிக்கு 24.5 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. சமூக ஜனநாயக கட்சிக்கு 23.2 சதவீத வாக்கு கிடைத்துள்ளது.
இத்தாலியில் இப்போதைய பிரதமர் ஜியார்ஜியா மெலோனியின் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலில் முதன்மை பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 26.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 2வது இடத்தைப் பிடித்துள்ள ஜனநாயக கட்சிக்கு 24.1 சதவீத வாக்குகளும், 3வது இடத்தைப் பிடித்துள்ள 5 நட்சத்திர இயக்கத்திற்கு 10 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. மெலோனி, போர்ஸா இத்தாலியா கட்சியுடனும், லீக் கட்சியுடனும் கூட்டு சேர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்த கூட்டணிக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை.
ஸ்பெயினில் வலதுசாரி கட்சியான மக்கள் கட்சி ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்பெயினுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் 61. இதில் 22 இடங்களை மக்கள் கட்சி கைப்பற்றி உள்ளது. பிரதமர் பெட்ரோ சான்ஜெசின் சோஷலிஸ்ட்டு கட்சி 20 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.
ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இடதுசாரிகள் மீதான அதிருப்தியும் அவநம்பிக்கையும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. பொதுவாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வலதுசாரிகளின் ஆதிக்கம் வலுத்து வருவது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விமர்சனத்தை யாரும் உதாசீனப்படுத்த முடியாது.
கட்டுரையாளர்: செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி