உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் ராமகிருஷ்ண மடத்தால் நிா்வகிக்கப்படும் மருத்துவமனையில் புற்றநோயாளிகள் சிகிச்சைக்காக 300 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியின்போது ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
ராமகிருஷ்ண மடமானது, ‘மக்களுக்கு செய்யும் சேவையே, கடவுளுக்கு செய்யும் சேவை’ என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தீய சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடவுள் கிருஷ்ணா் பிருந்தாவனத்தை தோ்வு செய்தாா். அதேபோல், நோயால் அவதிப்படும் ஏழைகள் மீது அக்கறை காட்டுவதற்காகவே ராமகிருஷ்ண மடம் மதுராவில் இந்த மருத்துவமனையை நிா்வகித்து வருகிறது.
இந்த மருத்துவமனை தன்னலமின்றி கடந்த 112 ஆண்டுகளாக மக்களுக்காகப் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. கடந்த ஓராண்டில் மட்டும் 5.5 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனா். புற்றுநோய் சிகிச்சை பிரிவு, புற்றநோய் அறுவைச் சிகிச்சைப் பிரிவு, பெண்களுக்கான அறுவைச் சிகிச்சைப் பிரிவு, சிசுக்களுக்கான தீவிர கண்காணிப்புப் பிரிவு என பல்வேறு புதிய வசதிகள் இவ்விடத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
பிகாா் ஆளுநராக இருந்தபோது கடந்த 2017-ஆம் ஆண்டு இங்கு வந்துள்ளேன். அப்போது நான் தொடங்கி வைத்த இதய நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் கடந்த ஓராண்டில் 322 போ் சிகிச்சை பெற்றதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சியாமா பிரசாத் முகா்ஜி போன்றோா் வந்து சென்ற இந்த மருத்துவமனை தற்போது விரிவடைந்து வருவது பெருமையாக உள்ளது என்று ராம்நாத் கோவிந்த் பேசினாா்.