ஏழை எளிய நுகர்வோரின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சேமிப்புக்கும் வழிபிறக்கிறது”

 

பாரதத்தில் வேதகாலத்தில் இருந்தே நுகர்வோர் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அதர்வண வேதத்தில், “தரம் மற்றும் அளவீட்டில் யாரும் ஏமாற்றக் கூடாது,” என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த பழங்கால ஆவணங்கள் நுகர்வோர் பாதுகாப்பின் விதிமுறைகளையும், முறைகேடுகளில் ஈடுபடும் வணிகர்களுக்கு தரப்படவேண்டிய தண்டனைகளையும் குறிப்பிடுகிறது.  இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கவுடில்யரின் காலத்தில், வணிகம் எப்படி நடைபெற வேண்டும் என்றும் நுகர்வோரின் பாதுகாப்பு எப்படி உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதையும் வகுத்திருந்தனர்.  இன்றைய வணிக இயக்குனர், தர ஆய்வாளர் பதவிகளுக்கு நிகரான பதவிகள் கவுடில்யரின் நிர்வாகத்தில் இருந்த பதவிகளில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நாம் நுகர்வோரை கடவுள்களாக மதிக்கிறோம்.  பல கடைகளில் வாடிக்கையாளர்களே கடவுள், என்ற வாசகத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.  வணிகம் எது என்றாலும் நுகர்வோரின் மனநிறைவே பிரதான நோக்கமாக இருத்தல் வேண்டும். ஐநா விதிமுறைகளை உருவாக்கிய ஒரே ஆண்டுக்குள், அதாவது 1986லேயே நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய மிகச்சில நாடுகளில் இந்தியாவும் உண்டு.

நுகர்வோர் நலனும், பாதுகாப்பும் அரசின் நோக்கங்களில் மிக முக்கியமான ஒன்று.  எங்களின் புதிய இந்தியா கொள்கையிலும் இது பிரதிபலிக்கிறது வீடு வாங்குவோருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம்.  இதற்கு முன் நுகர்வோர் தாங்கள் வாங்கும் வீட்டில் குடியேற ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது.  பல முறைகேடான விற்பனையாளர்களிடம் சிக்கி ஏமாந்தார்கள்.  அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கீஉகீஅவுக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட வீட்டு விற்பனையாளர்கள் மட்டுமே நுகர்வோரிடம் முன்பதிவுகளைப் பெற முடியும்.  அதுவும் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்பே முடியும்.  மேலும் முன்பதிவு கட்டணம் 10% மட்டுமே பெறப்பட வேண்டும் எனவும் உச்சவரம்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்த திட்டத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டதோ அந்த திட்டத்தில் மட்டுமே அதை செலவிடும் நிலை உருவாகியிருக்கிறது.

சமீபத்தில் இந்தியா அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) மூலம் ஏராளமான மறைமுக வரிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் எவ்வளவு வரி மாநில அரசுக்கும், எவ்வளவு வரி மத்திய அரசுக்கும் கட்டியிருக்கிறோம் என்பது நுகர்வோர்க்கு தெரியும்.  இதன்மூலம் நுகர்வோர்கள் மிகுந்த பலனை அடைய இருக்கிறார்கள். மிகவும் வெளிப்படையான அமைப்பு என்பதால் நுகர்வோரை ஏமாற்றும் வழிகள் இதில் எதுவும் இல்லை.

சட்டங்களின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாது, மக்களின் குறைகளை சரியான முறையில் களைய வேண்டியதும் அவசியம்.  கடந்த மூன்றாண்டுகளில் எங்கள் அரசு தொழில்நுட்பத்தின் உதவியுடன் நுகர்வோரின் குறைகளை களைவதற்கு ஏற்ற புதிய எளிமையான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய நுகர்வோர் உதவி எண்களின் அழைப்பு உள்வாங்கும் திறன் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த அரசு நுகர்வோர் பாதுகாப்புக்காக சமூக வலைதளங்களை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

சமீபத்தில் யூனிசெஃப் இந்தியாவில் மேற்கொண்ட கணக்கெடுப்பு முடிவுகளை அறிவித்திருக்கிறது.  திறந்தவெளியில் மலம் கழிக்கத் அவசியமில்லாத குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட அந்த கணக்கெடுப்பின்படி மருத்துவ செலவில் சேமிப்பு, நேர செலவழிப்பில் சேமிப்பு, இறப்பு சதவிகித குறைப்பு, பொருளாதார சேமிப்பு என ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 50,000ரூபாய் சேமிப்பில் சேர்கிறது.

பாரதிய ஜன் அவுஷாதி பரியோஜனா (மக்கள் மருந்தகம்) எனும் திட்டம் மூலம் 500க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.  இதயத்தில் பொருத்தும் கருவிகளுக்கு விலை உச்சவரம்பை நிர்ணயம் செய்ததன் மூலம் அவற்றின் விலை 85% வரை குறைந்துள்ளது. செயற்கை மூட்டுகளின் விலையும் இதன்மூலம் கட்டுப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கைகளின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தரமக்களின் பணம் கோடிக்கணக்கில் மிச்சப்படுகிறது.

நுகர்வோர் பாதுகாப்பு எனும் எல்லையைத் தாண்டி நுகர்வோர் நலன் குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுப்பதே நம் நோக்கம். பிரதமர் ஊரக டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வாழும் நுகர்வோரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்றுணர வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  இந்திய கிராமங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு வருங்காலத்தில் மின்-வணிக சந்தை பிரம்மாண்டமாக வளர வழி செய்கிறது. பீம் எனும் செயலியின் மூலம் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண வசதி, அதாவது யூ.பி.ஐ., நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் இணைய பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டில்

 (அக்டோபர் 26 அன்று) பிரதமர் ஆற்றிய உரையிலிருந்து