தமிழக அரசின் பால் கொள்முதல் விலை உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இதர சங்கங்களும் ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த 2 ஆண்டுகளாக போராடிவருகிறது. ஆனால், தற்போது, ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலை ரூ. 3 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கால்நடைத் தீவனங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு ஏமாற்றம் அளித்துள்ளது. எனவே, கொள்முதல் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆவின் பால் விற்பனையில் ஆவினுக்கு ஏற்படும் நஷ்டம் மற்றும் கூடுதல் செலவுக்கு மாநில அரசு மானியம் வழங்கவில்லை. தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயர்வு ரூ. 5-ல் இருந்து ரூ. 10 வரை கொடுக்கின்றன. இதனால் முன்பு இருந்த சுமார் 12,000 ஆரம்ப சங்கங்களில் தற்போது 8,000 சங்கங்கள்தான் ஆவினுக்கு பால் வழங்குகின்றன. பல சங்கங்கள் மூடப்பட்டு வருகின்றன. எனவே, தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுடன் பேசி சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், ஆரம்ப சங்க பணியாளர் சங்கங்கள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை கூட்டாக தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆவின் பால் விலை உயர்வால் டீ, காபி விலைகள் ரூ. 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.