எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறிக்கப் பார்க்கிறது இண்டியா கூட்டணி என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதிக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி வருகை தந்தார்.
அப்போது பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாஜக பறிக்கப் பார்க்கிறது என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர். இது பொய்யான தகவல். யாருடைய இடஒதுக்கீட்டையும் பாஜக எப்போதும் பறிக்காது. இண்டியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவர் (மறைமுகமாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை குறிப்பிட்டுப் பேசினார்), கால்நடை தீவன ஊழலுக்காக தண்டனை பெற்று சிறை சென்றார். அவரது வெட்கமில்லாத செயலை பாருங்கள். உடல்நலக் குறைவை காரணம் கூறி ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார். உங்கள் (பொது மக்கள்) கிராமத்தில் யாராவது ஒருவர் சிறைக்குச் சென்றால், அவரிடமிருந்து மக்கள் தள்ளியே இருப்பார்கள்.
ஆனால் காங்கிரஸ் கட்சி தனது நிலையிலிருந்து தரம் தாழ்ந்து அவரது கட்சியுடன் வெட்கமில்லாமல் கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறிக்க மாட்டோம். ஆனால் அதை செய்யப் போவது அவர்கள்தான் (இண்டியா கூட்டணி). முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தரப்படவேண்டும் என்று அவர் (லாலு) கூறி வருகிறார். மேலும் முஸ்லிம்கள் முழு இடஒதுக்கீட்டைப் பெறவேண்டும் என்று அழுத்திச் சொல்கிறார்.
இதற்கு என்ன அர்த்தம்? அதாவது எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து அதை முஸ்லிம்களிடம் வழங்கப் போகிறார்கள் என்று அர்த்தம். இப்படி கூறுபவர்களுக்கு மக்கள் வாக்குகளைச் செலுத்தலாமா? அவர்கள் ஆட்சிக்கு வரலாமா? கூடாது. இடஒதுக்கீட்டைப் பறிக்கப் பார்ப்பது காங்கிரஸ் கட்சிதான். இவ்வாறு மோடி பேசினார்.