தட்டுப்பாடு காரணமாக ஆற்று மணல் விலை உயர்ந்த நிலையில், தற்போது, எம் சாண்ட் விலையும் யூனிட்டுக்கு, 1,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது, இதனால், வீடு கட்ட திட்டமிடும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனையால், மணல் குவாரிகள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், மக்களிடம் எம் சாண்ட் பயன்பாடு அதிகரித்துள்ளதை பயன்படுத்தி, அதன் விலை உயர்த்தப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, 1,100 இடங்களில், 3,000 கருங்கல் குவாரிகள், 4,800 கிரஷர்கள் செயல்படுகின்றன. இதன் அடிப்படையில், தரமான முறையில் எம் சாண்ட் தயாரிக்க, 414 ஆலைகளுக்கு தரச்சான்று மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலைகளில் தயாராகும், 100 கனஅடி உடைய ஒரு யூனிட் எம் சாண்ட் விலை, 2,500 ரூபாயில் இருந்து, 3,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பூச்சு வேலைக்கு பயன்படுத்தப்படும், பி சாண்ட் ஒரு யூனிட், 3,000த்தில் இருந்து, 4,000 ரூபாயாக முதல் நிலையில் விற்கும் இடத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது, பல்வேறு நிலைகளை கடந்து மக்களிடம் வரும் போது, யூனிட்டுக்கு மேலும், 1,000 ரூபாய் அதிகமாக இருக்கும். மணலுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்பட்ட எம் சாண்ட் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது, வீடு கட்ட நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, கரூர், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் துவங்கிய இந்த விலை உயர்வு, படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.