எம்.எல்.ஏவின் பிரிவினைவாத கருத்து

தேசம் முழுவதும் சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளை அமிர்த மஹோத்சவமாகக் கொண்டாடிவரும் நிலையில், இடதுசாரிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில், கேரள முன்னாள் அமைச்சரும், முதல்வர் பினராயி விஜயனின் நெருங்கிய கூட்டாளியுமான எம்.எல்.ஏ கே.டி. ஜலீல் தனது முகநூல் பதிவில், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதி சுதந்திரமான காஷ்மீர் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் லோக்ஆயுக்தா நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக பதவி விலகிய அவர், காஷ்மீரின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் உண்மையிலேயே சுதந்திரமானவை. காஷ்மீர் அதன் அழகை இழந்து விட்டது. எங்கு பார்த்தாலும் ராணுவம் மட்டுமே தெரிகிறது. காஷ்மீர் சிரிக்க மறந்து விட்டது. அனைத்து அரசியல்வாதிகளும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது மோடி அரசு காஷ்மீரை மூன்றாகப் பிரித்துள்ளது. சட்டப்பிரிவு 370’ஐ ரத்து செய்தது அதன் நோக்கத்தை நிறைவேற்றுமா? என்று கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்ட காஷ்மீர் பகுதி “ஆசாத் காஷ்மீர்” என்று அழைக்கப்பட்டது. மேலும், இந்த பகுதி பாகிஸ்தான் அரசால் நேரடியாக பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அரசு, கரன்சி மற்றும் ராணுவ உதவிகளை மட்டுமே கட்டுப்படுத்தியது. ஆசாத் காஷ்மீருக்கென்று சொந்த ராணுவம் இருந்தது. ஜியாவுல் ஹக் அதிபராக இருந்தபோது ஒருங்கிணைந்த ராணுவம் ஆசாத் காஷ்மீரின் பொது ராணுவமாக மாறியது. என்று கே.டி ஜலீல் பதிவிட்டுள்ளார். இதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.