என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஞானவாபி தொடர்பாக கடந்த மே மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற முஸ்லிம் நபர், தேவையின்றி ஹிந்து மதம், சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த விவாதத்தில் பங்கேற்ற பா.ஜ.க செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இஸ்லாமிய இறைதூதர் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜ.க சஸ்பெண்ட் செய்தது. எனினும், இதனை சாக்காக வைத்து, நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள் சிலரையும் அவர்கள் கொடூரமாக கொலை செய்தனர். பலரை கடுமையாக தாக்கியுள்ளனர். குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அப்பாவி தையல் கடைக்காரர் கன்னையா லால் என்பவர் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கன்னையா லாலை கொலை செய்வதை வீடியோவாக எடுத்து அதை கொலையாளிகள் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதேபோல கடந்த ஜூன் 21ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் அமராவதியை சேர்ந்த மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே என்பவரையும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர் சில முஸ்லிம் பயங்கரவாதிகள்.

தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பியபோது அவரை பின் தொடர்ந்து வந்த முஸ்லிம் மதவெறி கும்பல், உமேஷை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக, முபஷீர் அகமது, ஷாரூக் கான், அப்துல் தவ்ஷப் ஷேக், முகமது ஷோயப், அதிப் ரஷீத், யூசப் கான், இர்பான் கான், அப்துல் அப்பாஸ், முஸ்பிக்யூ அகமது, ஷேக் ஷகீல், ஷஹிம் அகமது ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது.  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த என்.ஐ.ஏ, கைது செய்யப்பட்ட 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், உமேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி யூசப் கான். மருத்துவரான யூசப் கானுக்கும், மருந்துக்கடைக்காரர் உமேஷ் கோல்கேவும் பல ஆண்டு நண்பர்கள். யூசப்பிற்கு உமேஷ் பல நேரங்களில் பண உதவி செய்து வந்துள்ளார். யூசப் கான் அட்மினாக இருந்த ஒரு வாட்ஸ்அப் குழுவில் உமேஷ் கோல்கே, நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்து ஒன்றை பதிவிட்டார். உமேஷ் கோல்கேவின் பதிவை யூசப் கான் ‘ரஹிபரியா’ என்ற குழுவில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது நண்பர்களான ஷேக் இர்பான் உள்ளிட்டோர் மனதில் உமேஷ் குறித்து வெறுப்புணர்வை வளர்த்துள்ளார். இதையடுத்து, ஷேக் இர்பான், தான் நடத்தி வந்த தொண்டு நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்துவந்த நபர்களை உமேஷை கொலை செய்ய தேர்ந்தெடுத்தார். அவர்கள், உமேஷ் கோல்கே தனது மருந்துக்கடையை மூடிவிட்டு இரவு வீட்டிற்கு சென்றபோது அவரை பின் தொடந்து சென்று அவரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வாட்ஸ்அப் குழுவில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாலேயே மருந்துக்கடைக்காரர் உமேஷ் கோல்கே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.