மஹிந்திரா குழுமத் தலைவரும் பிரபல தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா, உலகப் பொருளாதாரத்தில் இங்கிலாந்தை விஞ்சி ஐந்தாவது இடத்துக்கு பாரதம் முன்னேறியுள்ளதது குறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இங்கிலாந்தை விஞ்சி பாரதம் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இதனால், உலக முதலீட்டாளர்களின் ரேடார் திரையின் மையத்தில் பாரதம் இடம் பெற்றுள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக நாம் மாறும்போது அவர்களின் கவனம் மேலும் எப்படி அதிகரிக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என பெருமிதம் தெரிவித்துள்ளார். பாரதம் இங்கிலாந்தை ஆறாவது இடத்திற்கு தள்ளி முன்னேறியுள்ளது. இது இரண்டாவது முறையாகும். முதல் முறையாக கடந்த 2019ல் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார மந்த நிலை பயத்தில் உள்ளபோதும் நடப்பு ஆண்டில் பாரதப் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் மேலாக எழுச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று, தற்போதைய வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 2027ல் பாரதம் ஜெர்மனியையும் 2029ல் ஜப்பானையும் விஞ்சலாம் என தெரிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.