எத்தனால் தயாரிப்புக்காக மது உற்பத்தி ஆலைகளுக்கு வினியோகிக்கப்படும் மக்காச்சோளத்தின் கொள்முதல் விலை, அரசு மானியமின்றி கிலோ ஒன்றுக்கு 22.91 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களில் கலக்கப்படும் எத்தனால் எனும் ரசாயனத்தின் அளவு 10 சதவீதம் வரை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான எத்தனால் தேவைகளை, தனியார் உற்பத்தி ஆலைகள் வாயிலாக மத்திய அரசு பெற்று வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் பெறப்படும் மக்காச்சோளத்தை, மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை கொள்முதல் செய்து, அதை என்.ஏ.எப்.இ.டி., எனப்படும், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் என்.சி.சி.எப்., எனப்படும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு வாயிலாக மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு வினியோகித்து வருகிறது.
இந்த கொள்முதல் தொடர்பான நடைமுறைகளை வகுக்கவும், கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பான கூட்டம், டில்லியில் சமீபத்தில் நடந்தது.
இதில், சம்பந்தப்பட்ட துறை செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், எத்தனால் தயாரிப்புக்கான மக்காச்சோள கொள்முதல் விலை, கிலோ ஒன்றுக்கு 22.91 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
மேலும், மதுபான ஆலைகளுக்கு அரசு மானியமின்றி இந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வினியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோவுக்கு 20 ரூபாய் என்ற விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது என கூறப்படுகிறது. இது தொடர்பான துறை ரீதியான ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின், வினியோகம் துவங்கப்பட உள்ளது.