எங்க ஆளு தான் தலைவர்; அடம் பிடிக்கிறது கேரளா

தமிழகம் -கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்கிறது. பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம் மறு ஆய்வில் உள்ளது. நெய்யாறு பாசன திட்டம், செண்பகவல்லி அணை சீரமைப்பு, பாண்டியாறு புன்னம்புழா திட்டம், பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டம் ஆகியவையும் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. இப்பிரச்னைகளுக்கு பேச்சு நடத்தி தீர்வுகாண, அ.தி.மு.க., ஆட்சியில் முயற்சி நடந்தது. அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையில் கேரளா சென்ற அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்; முடிவு எட்டப்படவில்லை. சமரச பேச்சை தொடர, தி.மு.க., அரசு இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால், கேரளா பிடிகொடுக்கவில்லை.

இந்நிலையில், பேச்சு நடத்த வரும்படி, கேரள நீர்வளத்துறைக்கு, தமிழக நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா கடிதம் எழுதி இருந்தார். அதற்கு, கேரளா மாநில நீர்வளத் துறையினர் பதில் கடிதம் எழுதி உள்ளனர். அதில், ‘பேச்சு நடத்தும் குழுவிற்கு, கேரள மாநில நீர்வளத்துறை செயலர்தான் தலைவராக இருப்பார். குழுவில் இடம்பெறும் தமிழக பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யுங்கள். சுழற்சி முறையில் தலைவர் பதவியை பகிர்ந்து கொள்ளலாம்’ என, கூறப்பட்டு உள்ளது. இது, தமிழக நீர்வளத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், நீண்ட இழுபறிக்கு பின், கேரளா பேச்சு நடத்த முன்வந்துள்ளதால், தமிழக நீர்வளத்துறையின் அடுத்தகட்ட பணிகளை துவக்க உள்ளனர்.