எங்கள் முத்துமாரி உலகத்து நாயகி

புதுச்சேரியில் உப்பளம் என்றொரு இடமுண்டு. அந்தப் பகுதியிலிருந்து ‘புஷ் வண்டி’ ஓட்டும் ஒருவர் பாரதியாருக்கு வழக்கமாக வண்டி ஓட்டுவார். அவர் ஒரு நாள் பாரதியாரிடம் சாமி! நீங்க ஒரு நாள் எங்க உப்பளத்திலுள்ள மாரியம்மா கோயிலுக்கு வரவேணும்ங்க” என்கிறார். உடனே பாரதியார் அதற்கென்ன நாளைக்கே வந்தால் போச்சு” என்றார். மறுநாள் காலையில் அந்த புஷ் வண்டிக்காரர் பாரதியின் வீட்டுக்கு வந்து உப்பளம் செல்லலாம் என்று அழைக்கிறார். பாரதியாரும் தன் இளைய மகள் சகுந்தலாவை அழைத்துக் கொண்டு அந்த புஷ் வண்டியில் உப்பளம் செல்கிறார். அங்கு இருந்த தேசமுத்து மாரி எனும் அந்த மாரியம்மன் கோயிலுக்கு புஷ் வண்டிக்காரர் அழைத்துச் செல்கிறார். அங்கு ஒரு வள்ளுவ இளைஞன் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டுகிறான். அப்போது பாரதி தன் மகள் சகுந்தலாவிடம், பாப்பா! அதோ பார் அந்த இளைஞன் அந்தணத் தொழிலை எத்தனை அழகாகச் செய்கிறான் பார்!” என்று சொல்லி வியந்து போகிறார். பிறகு அந்த இளைஞன் தீபாராதனை தட்டுடன் இவர்கள் இருக்குமிடம் வந்தபோது அவனைப் பாராட்டிவிட்டு, தம்பீ! நீ அடிக்கடி நம் வீட்டுக்கு வரவேண்டும்” என்கிறார்.

திரும்பி வரும்போது புஷ் வண்டிக்காரன் சொல்கிறான், சாமி, நீங்க வந்தது எங்க சேரி ஜனங்களுக்கு தெரியாமப் போச்சு. அவுங்க ஒங்களை மறுபடியும் ஒரு நாள் வரவேணும்னு கேட்கிறாங்க. அத்தோடு எங்க மாரியம்மா மேல நீங்க ஒரு பாட்டுக் கட்டி பாடணுங்க” என்கிறான். அவரும் சம்மதித்து அடுத்த நாளே அந்த புஷ் வண்டிக்காரனுடனும் மகள் சகுந்தலாவுடனும் உப்பளம் செல்கிறார். அங்கு மக்கள் வாசல் தெளித்து, கோலங்கள் போட்டு தோரணங்கள் கட்டி வரவேற்கின்றனர். பாரதி அம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது,  சாமி எங்க அம்மா மேல ஒரு பாட்டு பாடணுங்க” என்கின்றனர். உடனே பாரதி பாடத் துவங்க, அந்த மக்கள் தாரை, தப்பட்டையுடன் தாளமிட்டு ஆடத் துவங்குகிறார்கள். அங்கு ஒரே அல்லோலப் பட்டது. அந்தப் பாடல் இதோ:

 

 

உலகத்து நாயகியே! – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

உன்பாதம் சரண்புகுந்தோம் – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரி!