உஷாராவோம்

தேசத்தின் தலைநகர் டெல்லியில் நவம்பர் 10 அன்று தேச துரோக பயங்கரவாதி கார் குண்டு வெடிக்கச் செய்து பொதுமக்களில் 13 பேரை படுகொலை செய்த செய்தி, ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாவது அத்தியாயம் விரைவில் எழுதப்படும் என்ற எதிர்பார்ப்பை தேசத்தில் பரவலாக ஏற்படுத்தியுள்ளது என்பதை மறைப்பதற்கில்லை. அந்த அத்தியாயத்தை எழுதுவது பாரத ராணுவத்தின் பொறுப்பு.

பொதுமக்களின் பொறுப்பு என்ன என்று ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் தனது விழிப்புணர்வால் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். தெருவோரம் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டி பற்றி சந்தேகத்தின் பேரில் துருவத் தொடங்கினார். அடுக்கடுக்காக அதிர்ச்சி தரும் சதி திட்டம் பாதுகாப்பு படையினரின் கவனத்திற்கு வந்தது. மிகக் கொடூரமான அந்த தேசத்துரோக வன்முறை திட்டம் நசுக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்பை தவிர்க்க முடிந்தது. கிராமத்திலோ நகரத்திலோ வசிப்பவர்கள் கண்ணையும் காதையும் திறந்து வைத்துக் கொண்டு நடமாடுவது எவ்வளவு முக்கியம் என்று புரிகிறது. உஷாராவோம்.