“வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து விடுபட விரும்பும் உலகத்திற்கு, இந்திய வாழ்க்கை முறை, நம்பிக்கை தரும்,” என, கோழிக்கோடு ஐ.ஐ.எம்., கருத்தரங்கில், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் பேசிய பிரதமர் மோடி கூறினார்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில், ‘குளோபலைசிங் இந்தியன் தாட்’ என்ற தலைப்பின்கீழ் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் கலந்துகொண்டு, சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:
இந்தியர்களின் புதுமைகள், உலக நாடுகளை ஈர்க்கின்றன. அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளால், இந்தியாவை உலக நாடுகள், திரும்பிப் பார்க்கின்றன. வெவ்வேறு மொழிகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் இருந்தும், நாம் பல நூற்றாண்டுகளாக அமைதியாக வாழ்ந்து வருகிறோம். பலரால் முடியாதபோதும், நம் நாகரிகம் மட்டும் செழுமையாக உள்ளது. அமைதி மற்றும் இணக்கத்தை நம் நாட்டில் காணமுடியும் என்பதால்தான், நம் நாகரீகம் நன்றாக உள்ளது.
பல தசாப்தங்களாக, ஐ.நா.,வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு, மிகப்பெரிய பங்களிப்பாளராக இந்தியா இருந்து வருகின்றது. வன்முறைகள் ஏற்படக்கூடிய பகுதிகளில், மக்கள் அமைதி காற்றை சுவாசிக்கின்றனர் என்றால், அதில், நம் ராணுவத்தினருக்கும் ஒரு பங்கு இருக்கும்.
வெறுப்பு, வன்முறை, மோதல், பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து விடுபட விரும்பும் இந்த உலகத்திற்கு, இந்திய வாழ்க்கை முறை, நம்பிக்கையை வழங்கும். மோதல்களை தவிர்க்க, இந்தியா முரட்டு சக்தியை ஒருபோதும் பயன்படுத்தாது, அதற்குப் பதில், பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும்.
இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்றால், உலகமும் வளர்ச்சியைக் காணும். உலகம் செழிப்பாக இருந்தால், அதனால், இந்தியாவும் பயன்பெறும் என்பதையே இந்தியா நம்புகிறது.
துடிப்புமிக்க இளம் மக்கள் தொகையை நம் நாடு கொண்டுள்ளது. இன்றைய சூழலில், இந்தியாவில் இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். நம் மென்பொருள் துறை, இந்திய இளைஞர்களின் சக்தியை காட்டுகிறது. சர்வதேச அரங்கில், இந்தியாவின் நிலை உயர்ந்துகொண்டே செல்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.