உலக சமாதான தூதுவர்!
வசுதைவ குடும்பகம் – உலகம் வாசுதேவனாகிய இறைவனின் ஒரு குடும்பம்; சர்வே ஜனா சுகினோ பவந்து, லோகா சமஸ்தா சுகினோ பவந்து – அனைத்து மக்களும் நலமுடன் இருக்கட்டும், உலகனைத்தும் சுகமாக இருக்கட்டும் – என்ற பிரார்த்தனைகளைக் கொண்டது பாரத தேசத்தின் சநாதனம். இந்த தேசத்தின் தென்கோடியில் உள்ள தமிழகத்தில் அதே கருத்தின் அடிப்படையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என முழங்கினார்கள்! இத்தகு சிந்தனைத் தகுதியே போதுமே, உலக சமாதான தூதுவனாக முன்னிற்க!
துவாரகாநாதனான கண்ணன் இப்படித்தான் தூதனாக முன்நின்றான். பங்காளிகள் பகையாளிகளாகி இரு பெருங் கடலெனப் பொருத நின்றபோது, போரின் பின்விளைவுகளைச் சொல்லி அதை சற்றே சிந்தித்துப் பார்க்கச் சொன்னான். சமாதானமாகப் போனால் கிடைக்கும் பலன்களையும் எடுத்துச்சொன்னான்! போரென்று முடிவானாலும் முதலில் சமாதானம், பிறகே நன்கு யோசித்துப் போர் எனும் சூட்சுமத்தைப் போதித்தான். விதியின் வசத்தால் சிந்தனை மாற்றம் ஏற்படாமல் போரில் ஈடுபட்டு பேரழிவை குரு வம்சம் கண்டதை மகாபாரதம் நமக்கு எடுத்துச் சொன்னது.
இன்றும் அதே துவாரகை மா நிலத்தைச் சேர்ந்த ஒருவராக பாரதப் பிரதமர் மோடி உலக சமாதானத் தூதுவனாக முன் நிற்கிறார். பத்தாண்டுகளாய் நடக்கும் பங்காளிப் போரை முடித்து வைக்க சமாதானம் பேசுகிறார். எவர் தரப்பிலும் பக்கச்சார்பின்றி நடுவுநிலையுடன் தோள்கொடுத்து நம்பிக்கை ஊட்டுகிறார். இதுவே சநாதனம் கற்றுத் தந்த சமநீதி!
சமாதானம் பேசுபவனுக்கு என்று இலக்கணம் வகுத்தார்கள் நம் முன்னோர்! இரு தரப்புக்கும் இயைந்தவனாய், அவர்களைக் காட்டிலும் வலிமை கொண்டவனாய் இருந்தால் மட்டுமே, சாம பேத தான தண்டங்களைப் பயன்படுத்தி இரு தரப்புக்கும் நன்மை விளைவிக்க முடியும். இன்று பிரதமர் மோடியின் தலைமையிலான பாரதம் அந்த நிலையை எட்டியுள்ளதன் வெளிப்பாடே, உலக நாடுகள் வாவென்று விரும்பி அழைக்கும் உன்னத நிலையை நாம் காண்கிறோம்!
சோவியத் யூனியனாக இருந்து சிறு சிறு நாடுகளாய்ச் சிதறுண்டபோது, இயற்கை வளமும் ஆற்றின் பாசன சமவெளிப் பகுதிகளும் அதிகம் கொண்ட உக்ரைன், 1991ல் தம்மை ஒரு சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்து கொண்டது. அண்டையில் இருந்த ரஷ்யா அந்நிலத்தைத் தமதாக்க முனைந்தது. எழுந்தது தகராறு. கடந்த பத்தாண்டுகளாய் அவ்வப்போது வெடிச் சத்தங்கள் இரு தரப்பிலும் எழுந்து வந்தாலும், இப்போது உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகளும் அமெரிக்காவும் பின் நிற்க, ரஷ்யாவுக்கு சீனா, வடகொரியா என கம்யூனிஸ நாடுகள் பின் நிற்க இந்த யுத்த களம் மூன்றாம் உலகப் போராக உருவெடுக்குமோ என்ற அச்சம் ஏற்படுவது இயல்புதானே! ஆனால் இந்த இரு பக்கத்திலும் சார்பு நிலை எட்டாமல், அதே நேரம் நடுநிலை என சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு பேரழிவின் சாட்சியாய் மௌனமாய் இருக்காமல், பாரதம் களமிறங்கியதன் வெளிப்பாடே பிரதமர் மோடியின் இந்த ரஷ்யா, அடுத்து உக்ரைன் என சமாதான பயணங்கள்!
உக்ரைனில் பிரதமர் மோடி வெளிப்படுத்திய உடல்மொழி ஓர் உன்னத மொழி! சோகமே உருவான முகத்துடன் வலிய வந்து வரவேற்ற அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை கட்டித் தழுவி, தோளிலே கைபோட்டு அணைத்தபடி, பாரதத்தின் பரிவு சார் பாரம்பரிய உணர்வுப் பரிமாறலை உலகுக்கு எடுத்துரைத்தார். உக்ரைன் தலைநகரில் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, போரினால் இறந்த குழந்தைகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி, அந்நாட்டு பாரத சமூகத்தவரைக் கண்டு பேசி ஆதரவளித்து, மருத்துவ உபகரணங்களை உதவிப் பரிசாகக் கொடுத்து, உலகுக்கு ஒரு செய்தியையும் சொன்னார்.
ஜெலன்ஸ்கியுடனான பேச்சின் போது, அவர் குறிப்பிட்டது பின்னாளைய உலக நாடுகளுக்கும் வழிகாட்டும் கருத்துகளே!
“மோதல்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு பேரழிவாக அமைந்து விடுகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு மன வலிமையை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்ட மோடி, ஜெலன்ஸ்கியுடான பேச்சில், ரஷ்யாவுடனான போர் குறித்தே அதிக நேரம் பேசினார். உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் பாரதம் நடுநிலை வகிக்கவில்லை, வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை. அமைதியின் பக்கமே பாரதம் உள்ளது. போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்பது பாரதத்தின் நம்பிக்கை. தூதரக பேச்சு மற்றும் அமைதிப் பேச்சின் வாயிலாகவே, பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். இரு நாடுகளும் இதற்கு முன் வர வேண்டும். போரால், இளம் குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் துர்பாக்கியம் என்பதை ரஷ்யா, உக்ரைன் தலைவர்கள் உணர வேண்டும். அமைதி திரும்புவதற்கு, இரு நாட்டுத் தலைவர்களும் முன்வந்தால், அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய பாரதம் தயாராக உள்ளது… என்பதை குறிப்பாய் வலியுறுத்தினார் பிரதமர் மோடி!
ஆம்! வசுதைவ குடும்பகம் என்பது இந்நாட்டின் சனாதனக் கொள்கை! இந்தச் சிந்தனையே என்றும் உலகை வழிநடத்தும்!